புதுடெல்லி: மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இதில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜ மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த பகத் சிங் கோஷ்யாரி சமீபத்தில் சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார். எதிர்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் பாஜ - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணியும் அவருக்கு எதிராக போராட்டங்களை நடத்தின.
இதையடுத்து கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சிக்காக மகாராஷ்டிரா சென்றிருந்த போது, அவரை நேரில் சந்தித்த பகத் சிங் வயது முதிர்வு காரணமாக ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய விரும்புவதாகவும், வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் நேரத்தை ஒதுக்குவதாகவும் தெரிவித்தார். அதேபோல, லடாக்கின் துணைநிலை ஆளுநர் ஸ்ரீ ராதா கிருஷ்ணன் மாத்தூர் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மகாராஷ்டிரா, லடாக்கிற்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாக இருந்தது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா, லடாக் உட்பட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், ‘மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த பகத் சிங் கோஷ்யாரி, லடாக்கின் லெப்டினன்ட் கவர்னர் ராதாகிருஷ்ணன் மாத்தூர் ஆகியோரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில மாநிலங்களில் ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, மொத்தம் 13 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’ என கூறப்பட்டது. இதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பைஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜ முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், தேசிய கயிறு வாரிய முன்னாள் தலைவருமான சிபி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரா மாநில ஆளுநராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான அப்துல் நசீர், அருணாச்சலப்பிரதேச ஆளுநராக லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், அசாம் ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா, இமாச்சல பிரதேச ஆளுநராக ஷிவ் பிரதாப் சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பீகார் ஆளுநராகவும், பீகார் ஆளுநராக இருந்த சவுகான், மேகாலயா ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆந்திராவின் புதிய ஆளுநர் அப்துல் நசீர், அயோத்தி ராமர் கோயில் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த மாதம் 4ம் தேதி ஓய்வு பெற்ற இவரை ஆளுநராக நியமித்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி எழுப்பி வருகின்றன.* ‘பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பணியாற்றுவேன்’ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்பு, திருப்பூர் ஷெரிப் காலனியில் உள்ள அவரது வீட்டில் நேற்று நிருபர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘தமிழகத்திலிருந்து ஜார்கண்ட் மாநில கவர்னராக நான் நியமிக்கப்பட்டிருப்பது, தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்திருக்கும் இன்னொரு பெருமை. அங்கு வாழும் பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பணியாற்றுவேன். மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இணைப்பு பாலமாக பணியாற்ற உள்ளேன். கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பதை அரசியல் பரிணாம வளர்ச்சியாக பார்க்கிறேன். தமிழகத்திலிருந்து மீண்டும் ஒருவர் கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழகத்தின் மீது ஒன்றிய அரசு வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது’ என்றார்.* ஆளுநர் பதவி வகிக்கும் 3 தமிழர்கள்தெலங்கானா - புதுச்சேரி ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன், மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் ஆகியோர் பதவியில் உள்ளனர். தற்போது மணிப்பூரில் இருந்து நாகலாந்துக்கு இல.கணேசன் மாற்றப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கூடுதலாக பாஜவின் மூத்த தலைவரான சிபி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 3 பாஜ முன்னாள் தலைவர்களுக்கு வெவ்வேறு மாநிலங்களில் ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.புதிய ஆளுநர்கள்மாநிலம் ஆளுநர் முந்தைய பதவிஅருணாச்சல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சிக்கிம் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா வாரணாசி பழங்குடியின எம்எல்சிஜார்க்கண்ட் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பாஜ மூத்த தலைவர்இமாச்சல பிரதேசம் ஷிவ் பிரதாப் சுக்லா உத்தரபிரதேச பாஜ எம்பிஅசாம் குலாப் சந்த் கட்டாரியா ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர்ஆந்திரா எஸ்.அப்துல் நசீர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிசட்டீஸ்கர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் ஆந்திரா ஆளுநர்மணிப்பூர் சுஸ்ரி அனுசுயா உய்க்யே சட்டீஸ்கர் ஆளுநர்நாகலாந்து இல.கணேசன் மணிப்பூர் ஆளுநர்மேகாலயா பாகு சவுகான் பீகார் ஆளுநர்பீகார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இமாச்சல் ஆளுநர்மகாராஷ்டிரா ரமேஷ் பைஸ் ஜார்கண்ட் ஆளுநர்லடாக் பி.டி.மிஸ்ரா அருணாச்சல் ஆளுநர்* வாழ்க்கை குறிப்பு சி.பி.ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் திருப்பூர். இவரது மனைவி சுமதி. ஹரி என்ற மகனும், அபிராமி என்ற மகளும் உள்ளனர். பிபிஏ பட்டதாரியான இவர் தூத்துக்குடி வஉசி கல்லூரியில் படித்தார். அரசியலில் ஈடுபாடு கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழக பாஜவின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தவர். பல்வேறு மாநில தேர்தல்களுக்கும் பொறுப்பாளராகவும் செயல்பட்டவர். இவர் கோவை நாடாளுமன்ற தொகுதி எம்.பியாக 2 முறை இருந்துள்ளார். பாஜ மாநிலத்தலைவராக இருந்தபோது கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை யாத்திரை சென்றார். சமீபத்தில் இவர் பாஜவின் தேசிய நிர்வாக குழு உறுப்பினராகவும், கேரள மாநில பாஜ பொறுப்பாளராகவும் பதவி வகித்து வந்தார். 2016 முதல் 2019 வரை அகில இந்திய கயிறு வாரிய தலைவராக இருந்தார்.* நீதித்துறை சுதந்திரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் அயோத்தி வழக்கு, முத்தலாக் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பளித்த அமர்வில் இடம் பெற்றிருந்தவர். இவரது நியமனம் குறித்து காங்கிரஸ் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது. ‘ஓய்வுக்கு பிந்தைய விரும்பும் பதவிகள், ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகளை பாதிக்கின்றன’ என பாஜ மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 2012ல் பேசிய வீடியோவை டிவிட்டரில் டேக் செய்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘கடந்த 3-4 ஆண்டுகளில் இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன’’ என பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ‘‘ இதுபோன்ற நியமனம் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல ’’ என கூறி உள்ளார்.