பல்லாவரத்தில் வடமாநில தொழிலாளியை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த சிறுவன் உட்பட 2 பேர் கைது

பல்லாவரம்: வட மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார்( 42). சென்னை, கிண்டியில் தங்கியிருந்து பல்லாவரம் பகுதிகளில் கட்டுமான வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பல்லாவரம், கண்ணபிரான் கோயில் தெருவில் வேலையை முடித்து விட்டு, சர்ச் ரோடு பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு பைக்கில் வந்த சிறுவன் உட்பட 3 பேர், மனோஜ்குமாரை வழி மறித்து செல்போனை கேட்டனர்.

மறுத்ததால், கண்ணிமைக்கும் நேரத்தில், மறைத்து வைத்திருந்த பெரிய பட்டா கத்தியால், அவரை சரமாரியாக வெட்டி விட்டு செல்போனை பறித்து கொண்டு தப்பினர். அவ்வழியாக வந்தவர்கள், படுகாயமடைந்த மனோஜ்குமாரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் பேரில் பல்லாவரம் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடினர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பல்லாவரம், குளத்து மேடு பகுதியை சேர்ந்த அருண்குமார் (24) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது. நேற்று தங்களது வீடுகளில் பதுங்கியிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், அருண்குமாரை புழல் சிறையிலும் அடைத்தனர். மேலும், தலைமறைவான மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: