‘நாங்கள் தான் தாங்கிப் பிடிக்கிறோம்’பாஜவுடன் இந்த தேர்தல்தான் கடைசி: எடப்பாடி சூசகம்

அதிமுக மாநில அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருப்பசாமிபாண்டியன் இல்ல திருமணத்தை பாளை கேடிசி நகர் மாதா மாளிகையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வைத்து பேசியதாவது:

இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு நடைபெறும் முதல் நிகழ்ச்சியாக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதா காலத்தில் இருந்தே இந்த இயக்கம் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளது. ஆனால் இந்த இயக்கத்தை உடனிருந்தே அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். நான் இன்னும் சாதாரண தொண்டன் என்ற உணர்வோடு தான் உங்கள் மத்தியில் வந்துள்ளேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரோடு தொகுதியில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

ஈரோடு தொகுதியில், நான் அடுத்த கட்டமாகவும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பேன். பா.ஜ.வுடனான எங்கள் உறவில் எந்த நெருடலும் இல்லை. அவர்களோடு இணைந்து தான் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோம். பா.ஜ. எம்எல்ஏக்கள் என்னுடன் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதுபோல் அவர்கள் தனியாகவும் பிரசாரம் செய்கின்றனர். நாங்கள் பா.ஜ. கூட்டணியில் இருக்கிறோம். மக்களவை தேர்தலில் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப கூட்டணிகள் அமையும். அதிமுகவை எந்தக் கட்சியும் தாங்கிப் பிடிக்கவில்லை. நாங்கள் தான் அவர்களை தாங்கிப் பிடிக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தேர்தல் வரும்போதெல்லாம் அதிமுக-பாஜ கூட்டணி இறுதிப்படுத்துவதே ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு பெரும் பாடாகவே இருக்கிறது. பாஜ மேலிடம் கண் அசைத்தால்தான் எல்லாமே முடிவாகிறது. இதற்கு சிறந்த உதாரணம் ஈரோடு இடைத்தேர்தல் களமே சாட்சி. ‘சேரவே மாட்டோம், நாங்கள் ரெண்டு பேருமே வேட்பாளர்களை நிறுத்துவோம்’ என முரண்டு பிடித்த ஓபிஎஸ், இபிஎஸ்சை ‘உங்கள் ஸ்கூலுக்கு நாங்க ஹெட்மாஸ்டர்’ என்று கூறி மோதலுக்கு இடைக்கால நிவாரணத்தை அறிவித்து உள்ளது. இதற்கு பாடம் புகட்டவே நாடாளுமன்ற தேர்தலில் சூழ்நிலையை பொறுத்து கூட்டணி என எடப்பாடி தெரிவித்து உள்ளார். இவரது பேச்சை கேட்ட அதிமுகவினர், இந்த தேர்தல்தான் அதிமுக-பாஜ கூட்டணி கடைசி என்று எடப்பாடி சூசகமாக தெரிவித்து உள்ளார் என்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Related Stories: