திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முறைகேடுகளை தடுக்க பயோமெட்ரிக்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட், அறைகள் ஒதுக்கீடு செய்வதில் இடைத்தரகர்கள் மூலம் நடைபெறும் முறைகேடுகளை தவிர்க்க பயோமெட்ரிக் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடைத்தரகர்கள் முறைகேடாக அறைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகள் பெற்று தருகின்றனர். மேலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தும் ஏமாற்றி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கும் அறைகள் அவர்களது செல்போன் எண்ணுக்கு அனுப்பும் ஓடிபி வைத்து ஒதுக்கப்பட்டு வருகிறது. இதிலும் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே இதை தடுக்க பக்தர்களின் முகத்தை அடையாளம் காணவும் அல்லது பயோமெட்ரிக் முறையில் கைரேகை அறிமுகப்படுத்தவும் தேவஸ்தான அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த திட்டத்தை அமல்படுத்தினால் முறைகேடுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிய வந்துள்ளது. அதன்படி இந்த திட்டத்தை ஒரு வாரம் பரிசோதனை முறையில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: