சென்னை பெரம்பூரில் துணிகர சம்பவம்; ஜெ.எல். கோல்டு பேலஸ் நகைக்கடையில் 9 கிலோ தங்கம், வைரங்கள் கொள்ளை

* ஷட்டரை வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து உள்ளே புகுந்தனர்

* இணை கமிஷனர் ரம்யா பாரதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள ஜெ.எல். கோல்டு பேலஸ் நடைக்கடையின் ஷட்டரை வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி பல கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்களை பிடிக்க துணை கமிஷனர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தனது மகன் தருடன் இணைந்து ஜெ.எல். கோல்டு பேலஸ் என்ற பெயரில் நடைக்கடை நடத்தி வருகிறார். 2மாடி கட்டிடத்தில் முதல் தளத்தில் நகைக்கடையும், இரண்டாவது தளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இந்த கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கடையின் உரிமையாளரான தர் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் இன்று வழக்கம் போல் கடையை திறக்க தர் மற்றும் அவரது தந்தை ஜெயசந்திரன் ஆகியோர் வந்து பார்த்த போது, நகைக்கடையின் ஷட்டர் 2அடி அளவுக்கு சதுரமாக காஸ் வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி எடுக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே வெட்டப்பட்ட துளை வழியாக கடைக்குள் சென்று பார்த்த போது, கடையில் வைத்திருந்த 9 கிலோவுக்கும் மேலான தங்க நகைகள், 5 கேரட் மதிப்புள்ள வைர நகைகள், வெள்ளி பொருட்கள் என பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனால் பதற்றம் அடைந்த நகைக்கடை உரிமையார் தர் உடனே சம்பவம் குறித்து திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். அதன்படி போலீசார் மற்றும் தடயவியல் துறை நிபுணர் பஞ்சாச்சலம் மற்றும் மோப்ப நாய் கரிகாலன் ஆகியோருடன் வந்து கொள்ளையடிக்கப்பட்ட கடை முழுவதும் சோதனை நடத்தினர். மேலும், கடைக்குள் இருந்த நகைகள் வைக்கப்பட்டுள்ள லாக்கரையும் வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி அதில் இருந்து நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. கடைகள் முழுவதும் நகைகள் வைத்திருந்த பெட்டிகள் மற்றும் கம்மல்கள் சில சிதறி கிடந்தது. மோப்ப நாய் கரிகாலன் கடையில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சிறிது தொலைவு சென்று நின்றது.

மேலும், தடயவியல் துறை நிபுணர்கள் கடையில் உள்ள வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டப்பட்ட பகுதி, லாக்கர் என அனைத்து இடங்களிலும் ரசாயனம் தடவி கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை நடந்த நகைக்கடைக்கு தகவல் கிடைத்தவுடன் சென்னை மாநகர வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யா பாரதி, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளையர்கள் தங்களை அடையாளம் கண்டுப்பிடிக்க முடியாத படி, நகைக்கடையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ‘டிவிஆர்’ இயந்திரத்தையும் எடுத்து சென்றது தெரியவந்துள்ளது.

மேலும், கொள்ளையர்கள் இந்த நகைகடையை பல நாட்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தி இருப்பதும் உயர் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் 5 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டரை கொண்டு வந்து அதன் மூலம் ஷட்டரை சத்தம் இல்லாமல் வெல்டிங் இயந்திரம் மூலம் தகடுகளை வெட்டி கடைக்குள் நுழைந்துள்ளனர். ஒருவரை வெளியே காவலுக்கு நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். அப்போது யாருக்கும் சந்தேகம் வராதப்படி வெட்டப்பட்ட இரும்பு தகடை அதே இடத்தில் பொருத்தி எந்த வித பதற்றமும் இல்லாமல் கடையில் இருந்து மொத்த நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளதா, அல்லது கடையில் பணியாற்றிய பழைய ஊழியர்கள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஷட்டரில் தகடு வெட்டப்பட்ட விதத்தை பார்க்கும் போது, நகை கொள்ளையில் முன் அனுபவம் உள்ள கைதேர்ந்த கொள்ளையர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரம் குற்றவாளிகளை பிடிக்க இணை கமிஷனர் ரம்யா பாரதி மேற்பார்வையில் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் முதற்கட்டமாக, நகைக்கடை அமைந்துள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள், மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர, கொள்ளையடிக்கப்பட்ட நேரத்தில் நகைக்கடை அருகே இயங்கிய செல்போன் சிக்னல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரயில்  நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையங்களிலும்  தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் தடயங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் நகைக்கடை ஒன்றில் ஷட்டரை வெட்டி 9 கிலோ தங்கம், வைர நகைகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: