ரஷ்ய அதிபர் புடினுடன் அஜித் தோவல் சந்திப்பு

புதுடெல்லி: நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்யா புறப்பட்டு சென்றார். மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அஜித் தோவல் சந்தித்து பேசினார். இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டில்,‘‘இந்தியா-ரஷ்யா இடையே பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இருதரப்பும் தங்களது உறவை வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தான் தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான 5வது கூட்டத்தில் அஜித்  தோவல் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய அவர், எந்த நாடும்  ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை ஊக்குவிக்க அனுமதிக்கக்கூடாது. ஆப்கானிஸ்தான்  மக்களுக்கு தேவைப்படும் நேரத்தில் இந்தியா உதவிகரம் நீட்டும். ஒருபோதும்  அவர்களை கைவிடாது” என்றார். இந்த கூட்டத்தில் ஈரான், கஜகஸ்தான்,  கிர்கிஸ்தான், சீனா, தஜிகிஸ்தான், துர்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்  உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: