திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்

திருவள்ளூர்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 26 ஆண்டுகள் ஆகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், தொழிலாளர் நலத்துறை மற்றும் அதைச் சார்ந்த அலுவலகமான தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம், உதவி ஆய்வாளர் (முத்திரை மற்றும் எடையளவு), துணை ஆய்வாளர் அலுவலகம் ஆகியவைகள் திருவள்ளூர் ரயில்வே நிலையம் அருகே பெரியகுப்பத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம் (அமைப்பு சாரா நலவாரியங்கள்), பெரியகுப்பம், சித்தி விநாயகர் கோயில் தெருவில் செயல்பட்டு வருகிறது.

இதனால் வாடகை மூலம் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் தொகை அரசுக்கு செலவாகிறது. இந்த அலுவலகங்கள் தனித்தனியாக செயல்பட்டு வருவதால் பணிக்கு வருவோர்களின் விவரங்களையும் அறிந்துகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.  இந்த அலுவலகங்கள் தனித்தனியாக உள்ளதால் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் அலுவலக இருப்பிடத்தை கண்டறிந்து வர தாமதம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அமைக்க ரூ.2 கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2020ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு கடந்த 2021 ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றன.

தற்போது ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அனைத்து வசதிகளுடன் தயாராகி ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால் முள்புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் கேட்டபோது, ‘’தமிழக அரசு ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அமைக்க ரூ.2கோடியே 40 லட்சத்து 15 ஆயிரம் ஒதுக்கீடு செய்து, பொதுப்பணித் துறை (கட்டுமானம்) சார்பில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதன்பேரில் ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறைக்கான பிரிவு அலுவலகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் அடுத்த மாதம் திறந்து வைக்கப்படும்’ என்றார்.

Related Stories: