பேஸ்புக் தோழிக்கு திருமண டார்ச்சர்: வாலிபர் கைது

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கப்பியரை வேளாண்கோடு பகுதியை சேர்ந்தவர் ஷாலியோ (22). அவருக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊதல்கரை ரெட்டியார்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிஷோர் சிவசங்கர் (24) என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2 பேரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் நட்பாக பேசி பழகி வந்து உள்ளனர். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி ஷாலியோவை, நிஷோர் சிவசங்கர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து காதலுக்கும், நட்புக்கும் வித்தியாசம் தெரியாதவருடன் பழகிவிட்டோமே என்பதை நினைத்து நொந்து போய் உள்ளார் ஷாலியோ. உடனே பேஸ்புக் நண்பர் நிஷோர் சிவங்கருடனான நட்பை முறித்துக் கொண்டார். இது நிஷோர் சிவசங்கருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உடனே ஷாலியோவை பார்க்க வேண்டும் எ்ன்று குமரி மாவட்டத்துக்கு வந்து உள்ளார். அதன்படி பேஸ்புக் தோழி ஷாலியோ இரணியல் அருகே உள்ள பேயன்குழியில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கி இருப்பதை அறிந்தார். தொடர்ந்து நேற்று மதியம் அங்கு சென்று உள்ளார்.

அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிவிட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷாலியோவின் தாயார் லலிதாகுமாரி (47), உறவுகார பெண் பெனிஸ் (26) ஆகியோர் சேர்ந்து நிஷோர் சிவசங்கரை தடுத்து நிறுத்தி உள்ளனர். இருப்பினும் நிஷோர் சிவசங்கருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. தொடர்ந்து 3 பெண்களையும் அடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த லலிதாகுமாரி, பெனிஸ் ஆகிய 2 பேரும் குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக ஷாலியோ இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷோர் சிவசங்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: