மும்பை: திருமணமான சில மாதங்களில் ராக்கி சாவந்த்- ஆதில் துரானி இடையே சண்டை ஏற்பட்டதால், தற்போது போலீசார் வழக்குபதிந்து விசாரணை செய்து வருகின்றனர். பாலிவுட் ரியாலிட்டி நடிகை ராக்கி சாவந்த், கடந்தாண்டு மே மாதம் தொழிலதிபர் ஆதில் துரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஜாலியாக பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ராக்கி சாவந்தின் தாய் காலமானார்.
இந்நிலையில் தனது கணவர் ஆதில் துரானிக்கு எதிராக ராக்கி சாவந்த் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘எனது தாய் இறந்த துக்கத்தில் இருந்த என்னை பார்க்க எனது கணவர் ஆதில் துரானி வந்தார். அப்போது என்னை அவர் தாக்கினார். எனக்கு தெரியாமல் வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்து சென்றுவிட்டார். எனக்கு மிரட்டல் விடுத்தார். அவருக்கு ேவறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால், எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
அதையடுத்து காவல்துறையில் புகார் அளித்தேன்’ என்றார். நிருபர்களிடம் பேட்டி அளித்த போது, திடீரென ராக்கி சாவந்த் கீழே விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ராக்கி சாவந்தின் புகாரை பெற்றுக் கொண்ட மும்பை போலீசார், ஆதில் துரானிக்கு எதிராக ஐபிசி பிரிவு 406, 420, 498 (ஏ) மற்றும் 377 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு செய்தனர். தொடர்ந்து ஆதில் துரானியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ராக்கி சாவந்தின் சகோதரர் ராகேஷ் கூறுகையில், ‘எனது சகோதரிக்கு ஆதரவாக பேசியதால், என்னையும் ஆதில் துரானி தாக்கினார். இவ்வளவு கீழ்த்தரமாக செயல்படுவார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஏற்கனவே அவரது செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்தோம். இரண்டு மூன்று தடவை மன்னித்தோம். எங்களது அம்மா இறந்த மறுநாள் ராக்கியின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, அவரது முகம் வீங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். அழுது கொண்டிருந்த அவருக்கு ஆறுதல் கொடுத்து, போலீசில் புகார் அளித்தோம். தற்போது போலீசார் ஆதில் துரானியை கைது செய்துள்ளனர்’ என்றார்.