சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, கட்டிடம் கட்டிய ஈரோடு பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மீது விசாரணை நடத்த தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு, ஆயிரம் விளக்கு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
இந்த காவலர் குடியிருப்பு கட்ட ஈரோடு பகுதியை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது. இந்த கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்கம் என்பவர் உள்ளார். இந்த கட்டுமானத்தை இந்த தனியார் கட்டுமான நிறுவனம் ரூ.180.50 கோடிக்கு 1036 வீடுகள் கொண்டு அடுக்குமாடி கட்ட ஒப்பந்தம் எடுத்து பணி செய்தது. கடந்த 2018-19ம் ஆண்டுகளில் கட்டுமான பணிகள் நடந்தது. அதிநவீன வசதிகளுடன் காவலர் குடியிருப்பு கட்டப்பட்டது. அதிமுக ஆட்சி காவலத்தில் இந்த கட்டுமான முழுமையாக கட்டப்பட்டுள்ளது. இருந்தாலும், திமுக ஆட்சியில் மின்வசதி, பெயிண்ட், குடிநீர் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டது.
மற்றப்படி அனைத்து கட்டுமான பணிகள் அதிமுக ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது. ரூ.180.50 கோடியில் கட்டப்பட்ட 1036 வீடுகள் கொண்டு அடுக்குமாடி கட்டிடமானது, கடந்த ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்நிலையில், இந்த குடியிருப்பு தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாக அந்த குடியிருப்பில் வசிக்கும் காவலர் ஒருவர், தனது வீட்டில் உள்ள சுவருக்குள் அனைத்தும் உதிர்ந்து விழுந்ததாகவும், கைகள் வைத்தாலே சிமென்டுகள் அனைத்தும் உதிர்ந்து விழுவது போன்று வீடியோ காட்சிகளுடன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார். இது அந்த குடியிருப்பில் உள்ள 1036 காவலர் குடும்பங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைதொடர்ந்து, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம், அதிமுக ஆட்சியில் ரூ.180.50 கோடியில் 1036 வீடுகள் கட்ட ஒப்பந்த எடுத்த ஈரோடு கட்டுமான நிறுவனத்தின் மீது விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், புகார் எழுந்துள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் தன்மை குறித்து விரைவில் ஆய்வு செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.