காஸ் சிலிண்டர்கள் வெடிப்பதை தடுக்க நவீன பிளாஸ்டிக்கால் ஆன சிலிண்டரை பயன்படுத்தலாம்: ஐஓசி அதிகாரி ஆலோசனை

வேளச்சேரி: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில், கடந்த ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 18ம் தேதி வரை சுரக்க்ஷா சே சம்விருத்தி என்ற தலைப்பில் காஸை சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் உபயோகிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு   ஏற்படுத்த பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, மேடவாக்கத்தில் உள்ள இன்டேன் காஸ் தனியார் ஏஜென்சி சார்பில், மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சித்தாலப்பாக்கம், அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்,  எரிவாயுவை சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்த  விளக்க‌ படத்துடன்,  வாசகங்கள்   அடங்கிய  நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு காஸ் ஏஜென்சி உரிமையாளர் எம்.ராகவன் தலைமை தாங்கினார். இதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், சென்னை கோட்ட தலைமை அலுவலர் கவிதா ரவிக்குமார் கலந்துகொண்டார்.

அவர் பேசுகையில்,  ‘‘சமையலறைகள் காற்றோட்டமாகவும், தனியாகவும் இருப்பது  பாதுகாப்பானது.  தீ விபத்து ஏற்படும் போது சிலிண்டர்கள் வெடிப்பதால் அதிக சேதாரம் ஏற்படுகிறது. அதனால் நவீன பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட காஸ் சிலிண்டர்களை உபயோகிப்பது சிறந்தது. இவை தீப்பிடித்த வீடுகளில் இருக்கும்போது, பிளாஸ்டிக் எரிந்து காஸ் வெளியாகி அந்த இடத்தில் மட்டும் தீப்பிடித்து காஸ் தீர்ந்தவுடன் அணைந்துவிடும். அதனால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்படும். எப்போதும் ஐஎஸ்ஐ மார்க் உள்ள காஸ் ஸ்டவ், ரெகுலேட்டர், ரப்பர் பைப்களை வாங்கி உபயோகிக்க வேண்டும்’’ என்றார். இதையடுத்து, எல்பிஜி விற்பனை பிரிவு சீனியர் மேலாளர் டி.பிரதீபா எரிவாயுவை சிக்கனமாக உபயோகிப்பது குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் காஸ் ஏஜென்சி அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: