சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்த சோதனைகளில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்: 1200 இ-சிகரெட்டுகளும் பிடிபட்டன

சென்னை, ஜூலை 26: சென்னைக்கு பல்வேறு விமானங்களில் பெருமளவு கடத்தல் பொருட்கள் வருவதாக, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி துபாயிலிருந்து சென்னை வந்த தனியார் பயணிகள் விமானத்தில் சந்தேகப்படும்படி வந்த சென்னையைச் சேர்ந்த 2 பயணிகளை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் உடமைகளை சோதனை செய்தபோது, வெள்ளி நாணயங்கள் அதிகளவில் வைத்திருந்தனர். சுங்க அதிகாரிகள் அந்த நாணயங்களை ஆய்வு செய்தபோது, அனைத்தும் தங்க நாணயங்கள் என தெரிய வந்தது. அதன் மொத்த எடை 781 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ₹39 லட்சம். தங்க நாணயங்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் இலங்கையிலிருந்து வந்த தனியார் பயணிகள் விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதித்தனர். அவர் கையில் அணிந்திருந்த தங்க வளையல், மோதிரம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் அனைத்தும் 24 கிராம் சுத்த தங்கத்தில் செய்யப்பட்டது என்பதும் சுத்த தங்கத்தை கடத்துவதற்காக, ஆபரணமாக உருவாக்கி அணிந்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 497 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹30 லட்சம்.

மேலும் சார்ஜாவில் இருந்து வந்த தனியார் பயணிகள் விமானத்தில் வந்தவர்களை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தியபோது மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவர் தனது உடமைக்குள் மறைத்து வைத்திருந்த 366 கிராம் தங்க நகைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹21 லட்சம். தொடர்ந்து துபாயிலிருந்து வந்த மற்றொரு தனியார் பயணிகள் விமானத்தில் வந்தவர்களை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணியின் உடமைக்குள் மறைத்து வைத்திருந்த 1,200 இ- சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹30 லட்சம். சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில் ₹90 லட்சம் மதிப்புடைய 1.6 கிலோ தங்கம், ₹30 லட்சம் மதிப்புடைய 1200 இ- சிகரெட்கள் என மொத்தம் ₹1.2 கோடி மதிப்புடைய தங்கம், இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, 5 பயணிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்த சோதனைகளில் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்: 1200 இ-சிகரெட்டுகளும் பிடிபட்டன appeared first on Dinakaran.

Related Stories: