டிஎன்பிஎல் போட்டியில் விளையாட தேர்வாகாததால் விரக்தி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து கிரிக்கெட் வீரர் தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: டிஎன்பிஎல் போட்டியில் விளையாட தேர்வாகாத விரக்தியில், கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் சென்னை மாநகரின் முக்கிய மேம்பாலமாக திகழ்வதால், 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில், வடபழனியில் இருந்து பரங்கிமலை மார்க்கமாக நேற்று காலை 10.15 மணிக்கு, மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர், கத்திப்பாரா மேம்பாலத்தின் மீது சென்றபோது, திடீரென மொபட்டை நிறுத்திவிட்டு, யாரும் எதிர்பார்க்காத வகையில் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.

சுமார் 50 அடி உயரத்தில் இருந்து அந்த வாலிபர் குதித்ததால், தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 108 ஆம்புலன்ஸ் மூலம், அந்த வாலிபரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் 6வது பிரதான சாலையை சேர்ந்த சாமுவேல் ராஜ் (24) என்பதும், தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக தன்னை தயார்படுத்தி வந்த இவர், கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் தேர்வாவதற்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். ஆனால், 2 ஆண்டுகளும் தேர்வாகாததால் மன வருத்தத்தில், கத்திப்பாரா மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது.

மேலும், இவர் சில மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்திருக்கிறார். அப்படி நேற்று காலை ராமாபுரத்தில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்துவிட்டு வீடு திரும்பும் போது, மன உளைச்சலில் கத்திப்பாரா பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு அளவில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் இவர் சிறப்பாக விளையாடியதும், இவரது தந்தை யுவராஜ் சினிமா துறையில் மேனேஜிங் டைரக்டராக இருந்து வருவதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் கத்திப்பாரா மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post டிஎன்பிஎல் போட்டியில் விளையாட தேர்வாகாததால் விரக்தி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து கிரிக்கெட் வீரர் தற்கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: