குற்றம்சாட்டப்பட்ட பெண்ணிடம் கன்னித்தன்மை சோதனை அரசியலமைப்பிற்கு எதிரானது: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது. 1992ம் ஆண்டு கேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் இறந்த வழக்கில் இன்னொரு கன்னியாஸ்திரியான செபி மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2008ம் ஆண்டு சகோதரி செபியிடம் சிபிஐ சார்பில் வலுக்கட்டாயமாக கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் செபி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வரனா காந்தா ஷர்மா நேற்று தீர்ப்பளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: நீதித்துறை அல்லது காவல்துறை விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அல்லது காவலில் இருக்கும் பெண் கைதிக்கு நடத்தப்படும் கன்னித்தன்மை சோதனை அரசியலமைப்பிற்கு விரோதமானது. இது கண்ணியத்திற்கான உரிமையை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 21 வது பிரிவை மீறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே இந்தச் சோதனை பாலியல் ரீதியிலானது. காவலில் இருக்கும் போது குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் இத்தகைய சோதனைக்கு உட்படுத்தப்பட்டால் கூட, அந்தச் சோதனை மனித உரிமையை மீறுவதாகவும் இந்த நீதிமன்றம் கருதுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட சுதந்திரத்துக்கான உரிமை முக்கியம். இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

Related Stories: