விக்டோரியா கவுரி நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி ஐகோர்ட்டில் 5 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, ஐந்து பேர் கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதனால், சென்னையில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், வழக்கறிஞர் விக்டோரியா கவுரி ஐகோர்ட் நீதிபதியாக பதவியேற்பதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற கொலிஜியம், கடந்த 17ம் தேதி கூட்டிய கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக எட்டு பேரை நியமிக்க பரிந்துரை செய்தது. இவர்களில், பெரியசாமி வடமலை, கலைமதி மற்றும் திலகவதி ஆகியோர் மாவட்ட நீதிபதிகள். லக்‌ஷ்மி நாராயணன், விக்டோரியா கவுரி, பாலாஜி, நீலகண்டன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்கறிஞர்கள். ஏற்கனவே, மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி,ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கவுரியை கொலிஜியம் பரிந்துரைத்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. விக்டோரியா கவுரியை கூடுதல் நீதிபதியாக நியமனம் செய்த பரிந்துரைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தது.

இவை உச்ச  நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதிகள் கூறுகையில், ‘‘விக்டோரியா  கவுரியை உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரை செய்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பதவியேற்புக்கு தடை கேட்கிறீர்கள். அதனால் இதுபோன்ற சூழலில் நாங்கள் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இது தற்போதைய நிலையில் விசாரணைக்கு உகந்ததும் கிடையாது’’ என தெரிவித்தனர்.

மேலும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, இதுதொடர்பான காரணங்கள் பின்னர் விரிவாக  வழங்கப்படும்’’ என்றனர். இதையடுத்து, கூடுதல் நீதிபதிகளாக  நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் புதிய  நீதிபதிகளை அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நீதிபதிகள், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ்,  வக்கீல்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். புதிய நீதிபதிகள் வரவால் சென்னை உயர் நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.  

காலியிடங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது. பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பின்னர் புதிய நீதிபதிகள் நன்றி தெரிவித்து பேசினர். நீதிபதி விக்டோரியா கவுரி பேசும்போது, ‘‘லலிதாம்பிகா அம்மன், அன்னை அமர்தானந்தமயி அருளால், என் பெற்றோரின் ஆசீர்வாதத்தினால் பாரம்பரியமிக்க, இந்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பு ஏற்றுள்ளேன். கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு நெய்யூர் என்ற குக்கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த என் மீது நம்பிக்கை வைத்து, இப்பதவிக்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி.

முன்னாள் பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு தடையும் இல்லாமல் ஓடும் நதியை போல, என் வாழ்க்கையில் எல்லா தருணங்களும் எனக்கு உறுதுணையாக இருந்த என் கணவர், மகள்கள், ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினரையும் ஒரே விதமாக கருதி, சகோதரத்துவத்தை பேணி பாதுகாக்க வேண்டும்’’ என்றார். நீதிபதி  பி.பி.பாலாஜி பேசும்போது, நாணயத்தின் இருபக்கங்கள் என்று நீதிபதிகளையும், வக்கீல்களையும் கூறுவார்கள். அதை பொறுப்புடன் மேற்கொள்வேன் என்றார்.

நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பேசும்போது, அன்னை தமிழுக்கு முதல் வணக்கம். நான் ஏழை விவசாயக்கூலி குடும்பத்தை சேர்ந்தவன். கல்விக்கற்க பலர் எனக்கு உதவியாக இருந்தனர். நான் குழந்தையாக இருந்தபோதே என் தந்தை இறந்து விட்டார். என் தாயார், தாய்மாமன். அண்ணன், அக்கா உள்ளிட்டோர் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். அதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து பல தியாகங்களை செய்துள்ளனர். என் மூத்த வக்கீல்  வி.கே.முத்துசாமி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், எம்.எம்.சுந்தரேஷ், முன்னாள் நீதிபதி வி.பாரதிதாசன் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 நீதிபதி ஆர்.கலைமதி பேசும்போது, என்னை நீதிபதியாக நியமித்த அனைத்து நீதிபதிகளுக்கும், என் பெற்றோர், என் கணவர், எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல்  அமைப்புச்சட்டத்தின் படி என் பணியை நேர்மையாகவும் திறமையாகவும் மேற்கொள்வேன் என்றார். நீதிபதி கே.ஜி.திலகவதி பேசும்போது, என் பெற்றோர், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், என் கணவர், என் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

* நீதிபதியாக பதவியேற்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

நீதிபதி விக்டோரியா கவுரி பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்  நீதிமன்ற ஆவின் கேட் அருகே அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில  இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் மாநிலச் செயலாளர் சிவகுமார், சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்  விக்டோரியா கவுரி. அவரை, நீதிபதியாக நியமனம் செய்வது இந்திய நாட்டின்  ஒருமைப்பாட்டுக்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும் எதிராக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள அர்மேனியன் தெரு அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் சார்பில் விக்டோரியா கவுரியின் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால், என்எஸ்சி போஸ் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: