கோவை கார் வெடிப்பு வழக்கு: பறிமுதலான வெடிபொருட்கள் வெடிக்க வைத்து செயலிழப்பு

கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் பறிமுதலான வெடிபொருட்கள் அழிக்கப்பட்டன. கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர்  23ம் தேதி கார் வெடித்தது. இதில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் (29) உடல் கருகி இறந்தார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஜமேஷா முபின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வெடிபொருட்கள் வாங்கியது தெரியவந்தது. அதை காரில் கொண்டு சென்று வெடிக்க வைக்க முயற்சி செய்தபோது கோயில் அருகே வெடித்துவிட்டதாக தெரிகிறது.

வெடி பொருட்கள் வாங்கியது, சதி திட்டத்திற்கு உதவியது என பல்வேறு காரணங்களுக்காக ஜமேஷா முபினின் கூட்டாளிகள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 11 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை என்ஐஏ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர். வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர். அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன.

வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், ‘‘கோவையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் எங்கள் தொழிற்சாலையில் வைத்து செயல் இழக்கச் செய்யப்பட்டன. காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் உட்பட 18 பேர் வந்திருந்தனர்’’ என்றார்.

Related Stories: