துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம்... சுமார் 6,000 பேர் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கக்கூடும் என WHO அச்சம்!!

துருக்கி : துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. சிரியா நாட்டின் எல்லையில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள துருக்கி நாட்டின் காஜியான்தெப் நகரில் நேற்று அதிகாலை 4.17 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரில் இருந்து 33 கிமீ தொலைவில், 18 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா நகரில் இருந்து 330 கிமீ தொலைவில் உள்ள துருக்கியின் தியர்பாகிர் நகர் வரையிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் நிலநடுக்கத்தில் தரைமட்டமாகின. அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பலரும் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.

இதைத்தொடர்ந்து 7.5 மற்றும் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து தாக்கியதில் கட்டிடங்கள் நிலைகுலைந்து இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய மக்களின் மரண ஓலம் நகரம் முழுவதும் எதிரொலித்தது. இதனிடையே துருக்கியின் அங்காரா மாகாணத்தின் மத்திய அனடோலியா பகுதியில் அமைந்துள்ள கோல்பாசி நகரில் 4வது முறையாக இன்று காலை 8.43 மணிக்கு 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் பிற்பகலில் துருக்கியின் கிழக்கு பகுதியில் ஐந்தாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 என பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் கட்டிடங்கள் பல தரைமட்டமாகின.கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 6000-ஐ நெருங்கியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 8 மடங்கு அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

Related Stories: