வடிவுடையம்மன் கோயிலில் தெப்ப திருவிழா: திருவொற்றியூரில் பக்தர்கள் குவிந்தனர்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில் உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை தியாகராஜ சுவாமி மற்றும் சந்திரசேகர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் சந்திரசேகர சுவாமிகள்-திரிபுர சுந்தரி ஆகிய சுவாமிகள் ஆதிசேஷ குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளினர். பிறகு தெப்பம் குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தை 5 முறை சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அப்போது, குளக்கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமசிவாயா, ஓம் சக்தி பராசக்தி என பக்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து இரவில் தியாகராஜ சுவாமிகள் மாடவீதி உற்சவம் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. தெப்பத்திருவிழாவில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: