ராமநாதபுரத்தில் விரைவில் விமான நிலையம் வறண்ட மாவட்டம் இனி வளர்ச்சியில் ‘பறக்கும்’

* ஏற்றுமதிக்கு பிரச்னை இல்லை

* கடல், பனை தொழில்கள் செழிக்கும்

* அந்நிய செலாவணி அதிகரிக்கும்

* வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு ‘ஜாலி’

ராமநாதபுரம்: தமிழகத்தின் வறண்ட மாவட்டம், காவல்துறையில் ‘பனிஷ்மென்ட்’ மாவட்டம் என வறட்சிக்கும், தண்டனைக்கும் பெயர் போன ராமநாதபுரம் மாவட்டம் வளர்ச்சியை நோக்கி செல்லாதா? என மக்கள் ஏங்கி கொண்டிருக்கின்றனர். அண்டை நாடான இலங்கையுடன் வர்த்தகம் ரீதியிலும், வளர்ச்சியிலும் இந்த மாவட்டம் கொடி கட்டி பறக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆனால், விதி விட்டு வைக்கவில்லை. வரலாற்று சிறப்புமிக்க ஆன்மிக சுற்றுலா தலம், மக்கள் ஜனாதிபதி என்று அன்போடு அழைக்கப்படும், உலக நாடுகள் கொண்டாடும் மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாமின் நினைவிடம், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம், கடல் தொழிலில் அந்நிய செலாவணியை இழுக்கும் முக்கிய மாவட்டம், கடல் மற்றும் பனை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியில் சிறப்புமிக்க மாவட்டம் என பல பெருமைகளை கொண்ட ராமநாதபுரத்துக்கு நீண்ட போராட்டத்துக்கு பின் விமான நிலையம் என்ற

வரபிரசாரம் சாத்தியமாகி உள்ளது.

இந்த மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி, பனைமரம் வளர்த்தல் ஆகிய 3 முக்கிய தொழில்கள் நடந்து வருகிறது. இந்த தொழில்கள் மூலம் உற்பத்தியாகும் பொருட்கள், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட இங்கிருந்துதான் கடல்சார் உணவு உள்ளிட்ட பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், கடல் தொழில் அந்நிய செலாவணியில் லாபம் ஈட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.  இதேபோல், இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் முண்டு மிளகாய் உள்ளிட்ட முக்கிய வேளாண் பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு. இந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு, பனை ஓலை கைவினைப்பொருட்கள், நார் உள்ளிட்ட பனை பொருட்களும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  

கடல், விவசாயம், பனைமரம் உள்ளிட்ட 3 முக்கிய தொழில்கள் இருந்த போதிலும், மாவட்டம் பெரிய அளவில் வளர்ச்சியை எட்டாமல் பின்தங்கியே இருக்கிறது.  உற்பத்தி வளம் இருந்தும் முறையாக சந்தைப்படுத்துதல் இல்லாததுதான் வளர்ச்சிக்கு முக்கிய தடையாக உள்ளது. இதனால்., ராமநாதபுரம் மாவட்டம் விமான நிலையம் அமைந்தால்  மாவட்ட வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வருவதால் சுற்றுலாத்துறையும், அதன் சார்ந்த தொழில்களும்

வளர்ச்சியடையும்.

இதுதவிர, கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு முதல்வர் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இவர்கள் அனைவரும் மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து கார் மூலம் பயணம் செய்கின்றனர். ஏற்றுமதி வர்த்தகமும் மதுரை, திருச்சி, தூத்துக்குடியை மையப்படுத்தியே நடக்கிறது. இங்கு மீன்பிடி துறைமுகம்  உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளதால் கீழக்கரை, தொண்டி, பெரியபட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும்  பல்வேறு ஊர்களை சேர்ந்த மக்கள் சிங்கப்பூர், மலேசியா, கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக சென்று வருகின்றனர்.

இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வளைகுடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் மதுரை, திருச்சி உள்ளிட்ட விமானநிலையங்கள் வழியாக வந்து தரை வழி மார்க்கமாக செல்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பல்வேறு மாநிலத்தவர், வெளிநாட்டினர்  வந்து செல்கின்றனர், இதனை போன்று பல்வேறு தரப்பினரும் இங்கிருந்து  வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், ஒன்றிய அரசின் உதான் திட்டத்தில் உச்சிப்புளி பகுதியில் பயணிகள் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களும், தொழில்துறையினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த சூழல்நிலையில், உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தஞ்சை, வேலூர், நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்து, அதில் ராமநாதபுரத்திற்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் முதற்கட்ட பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக விரிவான செய்தி, கடந்த மாதம் 9ம் தேதி  தினகரன் நாளிதழில் (மதுரை பதிப்பு மட்டும்) வெளியானது. இதுகுறித்து, ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி, தற்போது நடந்து வரும் மக்களவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றிய விமான போக்குவரத்துதுறை இணை அமைச்சர் சார்பாக எழுத்துப்பூர்வ பதில் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில், ‘விரைவில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள கடலோர காவல்படைக்கு சொந்தமான விமான நிலையம், பொது பயன்பாட்டிற்காக விரிவாக்கம் செய்யப்பட்டு விரைவில் உள்நாட்டு விமான போக்குவரத்து துவங்கப்பட உள்ளது’ என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்து உள்ளார். விமான நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கினால், ராமநாதபுரம் மாவட்டம் இனி வளர்ச்சியில் பறக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. விரைவில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட மக்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சியினர் உற்சாகமடைந்து உள்ளனர்.   

Related Stories: