சட்டக்கல்லூரி, அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்பட நூலக பணிகளில் 35 காலிப்பணியிடங்கள்: மார்ச் 1க்குள் விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: ஒருங்கிணைந்த நூலக பணிகள், சார்நிலை பணிகளில் காலியாக உள்ள 35 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த நூலக பணி, சார்நிலை பணிகளில் அடங்கிய 35 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரியில் நூலகர் 8 இடங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் 1 இடம், மாவட்ட நூலக அலுவலர் 3 இடங்கள் என 12 இடங்கள் அடங்கும். இந்த காலிப்பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும்.  அதே போல் பொதுத்துறையின் கீழ் தலைமை செயலக நூலகம் நூலக உதவியாளர் 2 இடங்கள், பொதுநூலக துறையில் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் 21 இடங்கள் என 23 இடங்கள் அடங்கும். இப்பதவிகளுக்கு நேர்முக தேர்வு கிடையாது.

இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வுக்கு மார்ச் 1ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் இணையதளம்(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்களை மார்ச் 6ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மார்ச் 8ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு மே 13ம் தேதி நடைபெறுகிறது. 13ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும்,  பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும்.  எழுத்து தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: