கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் கோயம்பேட்டில் 14 ஆண்டுகள் வியாபாரியாக வலம் வந்த ரவுடி: ரகசிய தகவலின் அடிப்படையில் கைது; விருகம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை

சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நபர், பரோலில் வெளியே வந்த பிறகு மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், அந்த நபர் கடந்த 14 ஆண்டுகளாக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் வியாபாரியாக வலம் வந்த தகவல் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். சென்னை சாலிகிராமம் தசரதபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சசி(எ)சசிகுமார்(49). ரவுடியான இவர், கடந்த 1994ம் ஆண்டு விருகம்பாக்கத்தில் நடந்த கொலை வழக்கில், நீதிமன்றம் கடந்த 1996ம் ஆண்டு ஆயுள்தண்டனை விதித்தது.

பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர், சசிகுமார் கடந்த 10.11.2009ம் ஆண்டு 3 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். ஆனால், 3 நாட்கள் முடிந்த பிறகு ரவுடி சசிகுமார் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகிவிட்டார்.

பின்னர், சிறைத்துறை அதிகாரிகள் பரோலில் வந்த ரவுடி சசிகுமார் மீண்டும் சிறைக்கு வரவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இதற்கிடையே கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பலர் கூலி வேலை மற்றும் காய்கறி, பூ, பழங்கள் வியாபாரம் செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்து கடந்த வாரம் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பெரும்பாலான குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். அந்த வகையில், காய்கறி மார்க்கெட் பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்து வந்த சசி என்பவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும், பழைய குற்றவாளிகள் மற்றும் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்து தலைமறைவான குற்றவாளிகளின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, போட்டோவில் இருப்பது கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த கொலையாளி சசி(எ )சசிகுமார் என தெரியவந்தது. உடனே, சசிகுமாரை போலீசார் விருகம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் சசிகுமாரை கைது செய்து சிறைதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடந்த 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த போலீசாருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: