தாட்கோ மூலம் கடந்தாண்டில் 152 பேருக்கு ரூ.2.20 கோடியில் மானியத்துடன் கடனுதவி-கலெக்டர் தகவல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் கடந்த 2021ம் ஆண்டு மே முதல் கடந்த டிசம்பர் வரை 152 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பில் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (கிளினிக்), மகளிர் சுய உதவிக்குழுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவித் திட்டம், நிலம் மேம்படுத்துதல் (இரு பாலருக்கும்), துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்ட பட்டதாரிகளுக்கு தொழில் துவங்குவதற்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர், செலவு கணக்கர், நிறுவன செயலருக்கு நிதியுதவி என ஆதி திராவிடர்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வங்கி கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வாகனங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற்று கொண்டு பயன்பெற்று வரும் பயனாளிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:  தாட்கோ மூலம் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 07.05.2021 முதல் 31.12.2022 வரை தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 96 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.79.96 லட்சம் மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (கிளினிக்) 1 பயனாளிக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலும், மகளிர் சுய உதவிக்குழுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவித் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 152 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பில் மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டது.

 தாட்கோ திட்டங்களின் மூலம் பயன் பெற விரும்புவோர்கள் குடும்ப அட்டை, சாதிசான்று, வருமான சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்றிதழ், உடன் திட்ட அறிக்கை ஆகியவற்றினையும், வாகன கடனுக்காக விண்ணப்பிப்பவர்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து application.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி தர்மராஜ் கூறியதாவது: தாட்கோ மூலம் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் வாகன கடனுக்காக விண்ணப்பிக்கலாம் என்பது அறிந்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். சொந்த முதலீடாக ரூ.10 ஆயிரத்து 248 செலுத்தினேன். வங்கிகடன் ரூ.6.19 லட்சம் தாட்கோ மானியம் ரூ.2.25 லட்சம் என மொத்தம் ரூ.8.54 லட்சம் மதிப்பில் லோடு வாகனம் வழங்கப்பட்டது.

இந்த வாகனத்தை கொண்டு எனது தோட்டத்தில் பயிரிடப்படும் காய்கறிகளை எடுத்து செல்லவும் வெளி வாடகைக்கு செல்வதால் எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுபோன்ற திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், என்றார். இந்நிகழ்வில் தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: