குலுங்கிய கட்டிடங்கள்..வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

துருக்கி: சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் இதுவரை சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53ஆக அதிகரித்துள்ளது. தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.  நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் லெபனான், ஜோர்டான், பிரிட்டன், ஈராக் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயுபைப்லைன் வெடித்து சிதறியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, துருக்கியில் அவசர நிலையை பிரகடனம் செய்த அரசு, மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. துருக்கியை தொடர்ந்து சிரியாவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நிலநடுக்கத்தை தொடர்ந்து இத்தாலி சுனாமி பேரலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Related Stories: