இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு அந்தமான் மாஜி தலைமை செயலர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

போர்ட்பிளேர்: இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் முன்னாள் தலைமை செயலாளர் ஜிதேந்திர நரேன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைமை செயலாளராக பதவி வகித்து வந்தவர் ஜிதேந்திர நரேன். இவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 21 வயது இளம்பெண்ணை தனது கூட்டாளிகளான தொழிலதிபர் சந்தீப் சிங் என்ற ரிங்கு, தொழில்துறை முன்னாள் இயக்குநர் ரிஷிஷ்வர்லால் ரிஷி ஆகியோருடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தார். அந்த சமயத்தில் டெல்லி நிதித்துறை தலைவராக பதவி வகித்து வந்த ஜிதேந்திர சிங், பாலியல் புகார் காரணமாக அக்டோபர் 17ம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து ஜிதேந்திர சிங் உள்ளிட்ட 3 பேர் வழக்குப் பதிவு செய்த போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், சுமார் 90 சாட்சிகளின் வாக்குமூலங்கள், தடய அறிவியல் துறையின் அறிக்கைகள், மின்னணு ஆதாரங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள 935 பக்கங்களை உடைய குற்றப்பத்திரிகையை மோனிகா பரத்வாஜ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர்   தாக்கல் செய்தனர்.

Related Stories: