வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த பிரபல ரவுடி சிறையில் அடைப்பு

சென்னை: வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூர் அடுத்த ஒரகடம் வெங்கடேஸ்வரா நகர், முனுசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (32). வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்தவர் கார்த்திக் (29) இருவரும் பிரபல ரவுடிகள்.  இந்நிலையில் கடந்த 2ம் தேதி விஜயகுமாரின் வீட்டிற்கு வந்த ஓட்டேரி கார்த்திக், வீட்டு மாடியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஒரு நாட்டு வெடிகுண்டு திடீரென பலத்த சத்ததுடன் வெடித்ததில் கார்த்திக்கின் இரண்டு கைகளும் துண்டித்து படுகாயமடைந்தார்.

தகவலறிந்த அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையிலான போலீசார் விஜயகுமாரின் வீட்டிற்கு விரைந்து சென்று, படுகாயமடைந்த கார்த்திக்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்ததோடு, ரவுடி விஜயகுமாரையும் கைது செய்தனர். விசாரணையில், மற்றொரு ரவுடியான தாம்பரம் சூர்யா என்பவரும், ஓட்டேரி கார்த்திக்கும் நண்பர்களாக இருந்துள்ளதாகவும், நாளடைவில் ஏற்பட்ட தகராறில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே, சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டு கார்த்திக் வெடிகுண்டு தயாரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ரவுடியின் கைகள் துண்டான சம்பவம் அக்கம் பக்கத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: