மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 1,628 பேரிடம் அபராதமாக வசூலான ரூ.1.98 கோடி: நீதிமன்ற உத்தரவின்பேரில் 319 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் இருந்து வந்த 1,628 நபர்களிடம் போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் ரூ.1.68 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லையில் போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். தற்போது, புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி, போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராத தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.  

இதனால் போதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் நபர்கள், வழக்கு பதிவுக்கான ரசீதுகளை மட்டும் வாங்கிக் கொண்டு, அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்டிவிடுவதாக கூறிவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால், அப்படி செல்லும் நபர்கள் பிறகு அபராத தொகையை கட்டுவது இல்லை. அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் நேற்று வரை 8,227 பேர் போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாமல் உள்ளனர். எனவே, போதையில் வாகனம் ஓட்டி,  நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராத தொகையை வசூலிக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் தற்போது 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம், அபராதம் கட்டாத சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போன் செய்து நினைவூட்டி நீதிமன்ற உத்தரவுகளை கூறி அபராதம் செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 29ம் தேதி முதல் 4ம் தேதி வரையில் 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் நினைவூட்டலை தொடர்ந்து 358 பேர் போக்குவரத்து காவல் சிறப்பு மையங்களில் ஆஜராகி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ஆன்லைன் மூலம் தங்களது அபராத தொகையை செலுத்தினர். மேலும், 485 வாகன ஓட்டிகள் நீதிமன்றங்கள் மற்றும் தபால் நிலையங்கள், இ-சென்டர்கள் மூலம் தங்களது அபராத தொகையை செலுத்தியுள்ளனர்.

அதன்படி, 843 பேரிடம், நிலுவையில் இருந்த அபராத தொகையாக 87 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயை போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளனர். அதைதொடர்ந்து கடந்த 2 வாரங்களில் மொத்தம் 1,628 பேர் மீது உள்ள மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்குகள் தீர்க்கப்பட்டு, 1 கோடியே 68 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களுக்கு நீதிமன்ற  உத்தரவுப்படி 319 நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: