தமிழகம் முழுவதும் தைப்பூசம் கோலாகல கொண்டாட்டம் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: வடபழனி, கந்த கோட்டத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

சென்னை: தமிழகம் முழுவதும் தைப்பூசம் நேற்று கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சென்னையில் வடபழனி, கந்தகோட்டம் முருகன் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழ் கடவுளான முருகன் அவதரித்த நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. எட்டாவது நட்சத்திரமான பூசம் நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும். முருகன் அவதரித்த நாளும், பவுர்ணமியுமான இந்த சிறப்பு மிகுந்த நாளில் முருகனின் அனைத்து கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். மேலும், முருகனின் பக்தர்கள் மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து தைப்பூசம் வரை விரதம்

இருப்பார்கள்.

இந்த நேரத்தில் கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களையும் அன்றாடம் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள். இதைப்பூசம் அன்று பாதயாத்திரையாக முருகனின் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து தங்களது விரதத்தை முடிப்பார்கள். மேலும், முருகனடியார்களும் பாதயாத்திரையாக முருகனின் அறுபடை வீடுகளுக்குச் சென்று, முருகனை தரிசித்து வழிபாடு செய்வார்கள். இந்த நாள் முருகனின் அருளைப் பெறுவதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. மேலும், தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், விரதமிருந்து முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்றாலும் அந்நாளில் முருகப்பெருமானுடன் சிவபெருமானையும் வழிபடுதல் வேண்டும். அப்படி சிறப்பு வாய்ந்த தைப்பூசம் நேற்று நடந்தது.

முருகனின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிர்சோலை ஆகிய முருகன் கோயில்களில் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பன்னீர், புஷ்பக்காவடி எடுத்தும், மொட்டை போட்டும், அலகு  குத்தியும், பூக்குழி இறங்கியும், அன்னதானம் செய்தும் தங்களது  நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.  

சென்னையை பொறுத்தவரை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.  வடழனி முருகன் கோயிலில் நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். காவடி எடுத்தபடி பக்தி பரவசத்துடன் வந்த பக்தர்கள், கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தீ மிதித்தனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பால் குடம் ஏந்தியபடி ஊர்வலமாக வந்தும், அலகு குத்தியபடியும், தேர்களை அலகு குத்தியவாறு இழுத்தபடியும் வந்து தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தினர். ‘கந்தனுக்கு அரோகரா’, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷங்கள் விண் அதிர ஒலித்தன.

அதேபோல் வடபழனி முருகன் கோயிலில் நேற்றும் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தற்காக குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். அதிகாலையில் முருகப்பெருமானும் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல், சென்னை கந்தகோட்டம், பெசன்ட்நகர் அறுபடை வீடு, கபாலீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தைப்பூசத்தையொட்டி முருகன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து இருந்து தைப்பூச  திருவிழா நேற்று ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் படைசூழ கோலாகலமாக நடந்தது. முருகன் கோயில்களில் எங்கு திரும்பினாலும் பக்தர்களின்  கூட்டமாகவே காணப்பட்டது.

Related Stories: