30 குண்டுகள் முழங்க வாணிஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதை

சென்னை: பாடகி வாணி ஜெயராம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவில், வாணிஜெயராமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட காரணத்தால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயர மேஜை மீது அவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், நெற்றியிலும் மற்றும் மேஜையின் விளிம்பிலும் ரத்தக்கறைகள் இருந்தது என்றும் தடயவியல் நிபுணர் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

வாணி ஜெயராம் இறந்த நேரத்தில் அவரது வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை எடுத்து பார்த்த போது, அவர் இறப்பதற்கு முன்பும் இறந்த பின்னரும் அவரது வீட்டிற்கு யாரும் வந்து சென்றதாக எந்த சிசிடிவி பதிவுகளும் இல்லை. எனவே, தடயவியல் துறை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் விசாரணையின் அடிப்படையில்,  பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு மாநகர காவல்துறை தடயவியல் துறை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளின் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.  

இதையடுத்து வாணி ஜெயராம் உடல் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. சமீபத்தில் ஒன்றிய அரசு சார்பில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வாணி ஜெயராம் உயிரிழந்துள்ளார்.  3 தேசிய விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகள் பெற்றுள்ள வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறை மரியாதையுடன் நேற்று வாணி ெஜயராம் இறுதிச்சடங்கு நடந்தது.

Related Stories: