இன்று கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் மறியல்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: திருவண்ணாமலை கோயிலுக்கு பவுர்ணமி அன்று லட்சக்கணக்கில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதற்காக சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு செல்கின்றனர். இதனால் கிரிவலத்தை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஏராளமான சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று கிரிவலம் என்பதால் நேற்றுமுன்தினம் இரவு முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இன்று அதிகாலை 1.30 மணி அளவில் திருவண்ணாமலை செல்வதற்கு பேருந்துக்கள் நீண்டநேரமாக வராததால் விரக்தியடைந்த பயணிகள், இதுபற்றி போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள், செங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பேருந்துக்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே பொறுத்திருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதன்பிறகு பல மணி நேரத்துக்கு பிறகு பேருந்துக்கள் வராததால் ஆத்திரம் அடைந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென போராட்டம் நடத்தினர். கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மறியல் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.இதுபற்றி தகவல் அறிந்ததும் கோயம்பேடு உதவி ஆணையர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்தனர். இதன்பின்னர் போலீசாரும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, திருவண்ணாமலை செல்ல மாநகர பேருந்துகள் வசதி ஏற்படுத்தி தருகிறோம் என்று கூறியதை அடுத்து சாலைமறியலில் விலக்கிக்கொள்ளப்பட்டது.

 இதன்பிறகு 50க்கும் மேற்பட்ட மாநகர பேருந்தில் பயணிகள் சிரமமின்றி திருவண்ணாமலைக்கு சென்றனர். இந்த சம்பவம் காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது:

திருவண்ணாமலை கோயிலில் இன்றுகிரிவலம் நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, ஆரணி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 351 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்றுமுன்தினம் அன்றே திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு அன்று காலையில் இருந்து இரவு வரை பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதில் பக்தர்கள் மற்றும் பயணிகள் சிரமமின்றி சென்றுள்ளனர்.

இன்று நள்ளிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருவண்ணாமலை பேருந்துகள் வர தாமதமானதற்கு செங்கல்பட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுதான் காரணம். பஸ்கள் வந்தபிறகு பயணிகள் மற்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு 50க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துக்களை ஏற்படுத்தி கொடுத்தோம். அதில் பயணிகள் எளிதாக சென்றனர் என்றார்.

Related Stories: