பர்கூர் மலைப்பாதையில் மண் சரிவுகளை அகற்றும் பணி தீவிரம்

அந்தியூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் செல்ல பிரதான சாலையாக பர்கூர் மலைப்பகுதி சாலை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான சிறிய ரக, கனரகன வாகனங்கள்  சென்று வருகிறது.

அந்தியூரிலிருந்து வரட்டு பள்ளம், தாமரைக்கரை, பர்கூர், தட்டக்கரை, கர்கே கண்டி வரை பர்கூர் மலைப்பாதை ரோடு உள்ளது. அதனையடுத்து கர்நாடகா மாநிலத்திற்கு உட்பட்ட பாலாறு, ராமாபுரம், ஹனூர் என மலைப்பாதை ரோடு செல்கிறது.

கடந்தாண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த தொடர் மழையினால் தாமரைக்கரையில் இருந்து வரட்டுப்பள்ளம் சோதனை சாவடி வரை, பர்கூர் மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் போக்குவரத்து பாதிப்பு இருந்தது. போர்க்கால அடிப்படையில் மண் சரிவுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு போக்குவரத்து சென்றுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தாலும் பல இடங்களில் ரோட்டின் ஓரப்பகுதியில் மண் சரிவுகள் எடுக்கப்படாமல் பல மாதங்களாக இருந்த நிலையில் , தற்போது அதனை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நெடுஞ்சாலை துறையினர் அந்தியூரிலிருந்து பர்கூர் மலைப்பாதையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மண் சரிவுகள் அகற்றும் பணியினை செய்து வருகின்றனர்.  இப்பணியானது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து வருகிறது. விரைவில் பர்கூர் மலைப்பாதையில் உள்ள மண் சரிவுகள் அனைத்தும் முற்றிலும் அகற்றப்பட்டு போக்குவரத்து வசதி மிகவும் எளிதாக சென்றுவர நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகக் கூறினர்.

Related Stories: