போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் ஒற்றைபுலி அடிக்கடி ‘விசிட்’: பொதுமக்கள் பீதி

போடி: போடி மெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் ஒற்றைப் புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வர துவங்கி விட்டன.தேனி மாவட்டம், போடி மேற்குதொடர்ச்சி மலையில் தமிழக-கேரளா மாநிலங்களை இணைக்கும் போடி மெட்டு பகுதி உள்ளது. இப்பகுதியில் தமிழக விவசாயிகள் ஏலத்தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக கேரளா பகுதியான பியல்ராவ், சுண்டல், தோண்டிமலை, கோரம்பாறை, மூலத்துறை, யானை இரங்கல், தலகுளம், முதுவாக்குடி, சூரியநல்லி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் ஏலத்தோட்டம் விவசாயம் நடந்து வருகிறது.

ஒற்றைப்புலி நடமாட்டம்: இந்நிலையில் கடந்த சில நாட்களாக யானை இரங்கல் அணையை மையமாகக் கொண்டு 13க்கும் மேற்பட்ட யானைகள் தோட்ட தொழிலாளிகளுக்கு பல்வேறு தொந்தரவுகளை செய்து வருகின்றன. நேற்று காலை பியல்ராவ் கள்ளிப்பாறை அருகே சிகரெட் கொம்பன் யானை தாழ்வாக சென்ற மின்வயரை தும்பிக்கையால் தொட்டு சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியானது குறிப்பிடதக்கது. இந்நிலையில், யானை நடமாட்டத்தை தொடர்ந்து, தற்போது இப்பகுதியில் ஒற்றை புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. போடிமெட்டு-மூணாறு சாலையிலும், தேயிலை மற்றும் ஏலத்தோட்ட பகுதியிலும் ஒற்றைப்புலி அடிக்கடி சுற்றி வருகிறது. இதனால் இப்பகுதியில் டூவீலரில் செல்பவர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தேயிலை, ஏலத்தோட்டங்களில் ஒற்றை புலி நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நாய்களை காணவில்லை: அதுபோல், கேரள மாநிலம், மூணாறு தோட்டப்பகுதியில் தொழிலாளர்கள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவைகள் மீது அவ்வப்போது புலி தாக்குதல் நடத்தி வருகிறது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் அடிமாலி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தலமாலி, அம்பளிகுன்று, பெட்டிமுடி பகுதிகளில் புலி புலிகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து கூம்பன்பாறை வனச்சரக அலுவலகத்தின் கீழ் பகுதியான அம்பிளிக்குன்று பகுதிகளில் புலியின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த நாய்களை காணவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஏராளமான பசுக்கள் பலி: அதுபோல், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு சோலமலை எஸ்டேட் பகுதியில் மட்டும் புலி தாக்குதலால் கொல்லப்பட்ட பசு மாடுகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது. இந்த பகுதியில் ஏராளமான பசுக்களை புலி தாக்கி கொன்றுள்ளது. பகல் நேரங்களில் கூட மக்கள் வெளியேற முடியாத நிலை உள்ளது. நல்லதண்ணி கல்லாறு எஸ்டேட் பகுதிகளில், புலி தாக்குதலில் காயமடைந்தவர்களும், உயிர் தப்பிய தொழிலாளர்களும் உள்ளனர்.

வனவிலங்குகளின் தாக்குதலுக்கு இடது, வலது என பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தும், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். இதற்கு எதிராக தொழிலாளர்களின் பல சங்கங்களும் போர்க்கோடி தூக்கியுள்ளன. புலி தாக்குதலை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்காவிடில், தொழிலாளர்களை ஒன்று சேர்த்து வனத்துறைக்கும் எதிராராக போராட்டங்கள் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. எனவே புலியின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: