கூட்டணி கட்சியின் உட்கட்சி பிரச்னையில் தலையிட மாட்டோம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு: பாஜ தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி

சென்னை: ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், எடப்பாடி அணி வேட்பாளருக்கு பாஜ ஆதரவு தெரிவிக்கும். கூட்டணி கட்சியின் உட்கட்சி  பிரச்னையில் எந்த விதத்திலும் தலையிட மாட்டோம்’ என்று பாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில்மாநில தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அதிமுக போட்டியிட வேண்டும். அதுவும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதற்காக தான் கடந்த 8 நாட்களாக ஓபிஎஸ், இபிஎஸ்சிடம் பேசிக்கொண்டு இருந்தோம்.

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பு கூட என்னை தொலைபேசியில் அழைத்து 31ம் தேதி வரை காத்திருப்பேன். அதன் பிறகு வேட்பாளரை அறிவிப்பேன் என்று கூறினார். அதேபோல ஓபிஎஸ் வேட்பாளரை அறிவித்து விட்டார் நானும் வேட்பாளரை அறிவிக்கிறேன் என்று எடப்பாடி வேட்பாளரை அறிவித்தார். இதன் மூலம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பது தான் பாஜவின் நிலைப்பாடு. ஒரு வேட்பாளர் நிறுத்த வேண்டும். வலிமையான வேட்பாளர் நிறுத்த வேண்டும். அதனால், தான் பாஜ தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி வந்திருந்தார். நாங்கள் சொல்லியது ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். அந்த வேட்பாளருக்கு முழு ஆதரவு கொடுத்து நாங்களும் உழைப்பதற்கு தயார்.

அந்த வேட்பாளர் சின்னத்தில் இருக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு இருக்கிறது. சின்னம் என்பது கூடுதல் பலம் என்று சொன்னோம். இதை சொல்லிவிட்டு ஓபிஎஸ், இபிஎஸ்ஸை சந்தித்து பேசினோம். தொலைபேசியிலும், நேரில் சென்றும் வேண்டுகோள் வைத்தோம். கட்சியின் நலனிற்காக, தமிழகத்தின் நலனுக்காக இடைத்தேர்தல் என்பது முக்கியமான தேர்தல். இன்னும் அனைவரும் இணைந்து ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும். எடப்பாடி அணியின் வேட்பாளர் இரண்டு முறை அங்கே எம்எல்ஏவாக இருந்த வேட்பாளர். அந்த பகுதியில் இருக்கும் வேட்பாளர். எனவே, அந்த வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தோம். ஓ.பன்னீர் செல்வமும் கருத்தை வைத்தார். குறிப்பாக நான் கையெழுத்து போட தயார் என்று கூறி சில கருத்துக்களை நிபந்தனைகளுடன் தெரிவித்தார்.

அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்த்தோம். எடப்பாடி, ஓபிஎஸ்சும் அவர்கள் சார்பாக அறிக்கை வெளியிட்டார்கள். அந்த வேட்பாளரோடு பாஜ இணைந்து முழுமையாக வெற்றிக்காக பாடுபடுவோம் என்று ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் உறுதிமொழி கொடுத்தோம். இந்த கூட்டணி 2024 தேர்தலில் மிகப்பெரிய சாதனையை செய்ய போகிறது. பாஜ தேர்தலில் நிற்க போவது கிடையாது என்று தேர்தல் அறிவித்த போதே ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் தெரிவித்து விட்டோம். அதிமுகவில் உட்கட்சி பிரச்னையை அவர்கள் தீர்த்து கொள்ள வேண்டும். அது அவர்களின் பிரச்னை, அதற்கும் பாஜவுக்கும் சம்பந்தம் இல்லை.

பாஜவின் உறுதிப்பாடு என்னவென்றால், கூட்டணி கட்சியின் உட்கட்சி  பிரச்னையில் எந்த விதத்திலும் தலையிட மாட்டோம். அதிமுகவுக்கு யார் தலைவர் என்று தேர்வு செய்வது அந்த கட்சியின் தொண்டர்கள் தானே தவிர நாங்கள் கிடையாது. 2 பேரும் ஒன்று சேருங்கள் என்று எப்போதும் சொன்னது இல்லை. சொல்லப்போவதும் இல்லை. தேசிய கட்சி என்ற முறையில் சுயேச்சையாக ஒருவர் போட்டியிடும் போது அவருக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க முடியாது.  இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கோம். எங்களின் முழு ஆதரவு இருக்கிறது.  இடைத்தேர்தலில் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால், எங்களின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவித்து இருக்கிறோம்.

கூட்டணியின் மாண்புக்காக 2024 தேர்தல் நமக்கு முக்கியமானது. கூட்டணியில் அதிக எம்பிக்கள் சென்று அமர வேண்டும். நல்ல முடிவு வரும் என்று நம்புகிறோம். அதிமுகவை பொறுத்தவரை 2 தலைவர்களும் எங்களுக்கு வேண்டும். ஆனால், தேர்தல் என்று வரும் போது வெற்றி வாய்ப்பு இருப்பவரின் பக்கமே அணிவகுத்து நிற்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பிரசாரத்துக்கான தேர்தல் காலம் மிக குறைவாக உள்ளது. ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார். இரட்டை இலை யாரிடம் இருக்கிறது என்று சொல்வதை விட, இரட்டை இலையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: