அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் கடிதம்

சென்னை: ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி, அதிமுக வேட்பாளராக தென்னரசு நிறுத்தப்பட்டுள்ளார்’’ என்ற படிவத்தை அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைத்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் ஆபத்து நிலவியது. இதையடுத்து, இரட்டை இலை சின்னத்தை கேட்டு எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது நேற்று முன்தினம் விசாரணை நடத்தி, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்து கேட்டு வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அந்த தகவல் அவைத்தலைவர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கினால், இரட்டை இலை சின்னம் வழங்கலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து, இபிஎஸ் - ஓபிஎஸ்  தங்களது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில், அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று காலை அதிமுக வேட்பாளராக தென்னரசு நிறுத்தப்பட்டுள்ளார் என்று அச்சடித்த படிவத்தை வெளியிட்டார்.

இந்த படிவம் அதிமுகவில் உள்ள 2,675 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த, பிரமாண பத்திரத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி அணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளருக்கு ஒப்புதல் அளிக்க, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் தங்களது விருப்பத்தை படிவத்தில் பதிவு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

படிவத்தை இன்று (5ம் தேதி) இரவு 7 மணிக்குள் சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிகளவில் இருப்பதால் அவரது அணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: