தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 88 கோயில்களின் செலவுக்காக ரூ.3 கோடி அரசு மானியம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள, 88 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக ரூ.3 கோடிக்கான காசோலையை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லேவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தில் 88 ஒருங்கிணைந்த கோயில்களின் நிர்வாகமானது, பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர், பொருளாளர் மற்றும் மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தேவஸ்தானத்துடன் இணைந்துள்ள 88 கோயில்களில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்கும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் மற்றும் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணிகோயில் எனப்படும் வெண்ணாற்றங்கரை மேலசிங்க பெருமாள் கோயில், மணிகுன்ற பெருமாள் கோயில் மற்றும் நீலமேகப் பெருமாள் கோயில் ஆகிய முக்கிய கோயில்கள் உள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திலுள்ள 88 கோயில்களின் நிர்வாகம் மற்றும்  பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக ரூ.3 கோடிக்கான காசோலையை முதல்வர்  மு.க.ஸ்டாலின் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா  பான்ஸ்லேவிடம் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு டிச.27ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான அரசு மானியத்தை ரூ.3 கோடியிலிருந்து ரூ.6 கோடியாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான திருக்கோயில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான அரசு மானியத்தை ரூ.1 கோடியிலிருந்து ரூ.3 கோடியாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: