சிகிச்சை பெற வந்ததாக கூறி டாக்டர், அவரது மகன் மீது தாக்குதல் பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளர் மகன் உள்பட 8 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையின் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் இளங்கோவன். ஓய்வுக்கு பின்னர் இவர் மாங்காட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவ கல்லூரியில் டீனாக  பணியாற்றி வந்தார். இவரது மகன், மருமகள் மற்றும் மருமகன் ஆகியோர் அதே கல்லூரியில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில், அந்த பணியை ராஜினாமா செய்த டாக்டர் இளங்கோவன், கே.கே.நகரில் குரு ராகவேந்திரா என்ற பெயரில் மருத்துவமனையை 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். மேலும், மருத்துவமனை உள்ள கட்டிடத்தின் 2வது தளத்தில் அவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2014 ஜனவரி 5ம் தேதி டாக்டர் இளங்கோவன் மற்றும் அவரது குடும்பத்தினர், தூங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 4.15 மணிக்கு மாங்காடு மருத்துவ கல்லூரி உரிமையாளரின் மகன் கோகுல் (எ) கோகுலகிருஷ்ணன் தனது கூட்டாளிகளுடன் மருத்துவமனைக்கு வந்துள்ளார். இதை சிசிடிவி கேமராவில் பார்த்த டாக்டர் இளங்கோ வந்தவர்களிடம் விசாரித்தபோது தனது கையில் காயம் இருப்பதாக கோகுல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கதவை திறந்து வெளியே வந்த டாக்டர் இளங்கோவனை, கோகுல் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளார்.  ‘பெட்டிஷனா போடுறீங்க, உங்களை காலி பண்ணிவிடுவோம்’ என்று மிரட்டி உள்ளனர்.

சத்தம்கேட்டு வந்த இளங்கோவனின் மகன் டாக்டர் குருபரத்தையும் கடுமையாக தாக்கினர். குருபரத் அணிந்திருந்த லுங்கியை அவிழ்த்து அவமானப்படுத்தி, அவரது மர்ம உறுப்பு பகுதியில் காலால் உதைத்து தாக்கியுள்ளனர். பின்னர் மருத்துவமனை வரவேற்பறையில் இருந்த மேஜை உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.  படுகாயமடைந்த டாக்டர் இளங்கோவன் மற்றும் அவரது மகன் ஆகியோர் சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கோகுல் (எ) கோகுலகிருஷ்ணன், (27), அலெக்ஸ் (26), அறிவழகன் (28), ஹரி (28), தினேஷ் (28), சதீஷ் (28), கணேஷ் பிரபு (22), ஜெயகாந்த் (34) ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், காயம் விளைவித்தல், கொலை முயற்சியில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளிலும், தமிழ்நாடு மருத்துவ சேவையர் மற்றும் மருத்துவ சேவை நிலையங்கள் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வி.தங்க மாரியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் கோகுல் உள்ளிட்ட 8 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மொத்தம் ரூ.48 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் ரூ.30 ஆயிரத்தை டாக்டர் இளங்கோவனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: