வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவை டோக்கன் வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி: 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி, கலெக்டர், டிஐஜி, எஸ்பி நேரில் ஆறுதல்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தைப்பூசத்தையொட்டி இலவச புடவைகள் பெறுவதற்காக டோக்கன் வாங்க திரண்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜின்னாசாலை அருகே தனியார் நிறுவனத்தின் சார்பில் தைப்பூசத்திற்காக ஏழைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இலவச வேட்டி மற்றும் புடவை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், தைப்பூசத்தையொட்டி இலவச புடவை வழங்குவதற்கான டோக்கன்கள் நேற்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் டோக்கன் வாங்குவதற்காக நேற்று பிற்பகல் ஒரே நேரத்தில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் திரண்டனர். ஏராளமான பெண்கள் டோக்கன் வாங்க வெளியில் காத்திருப்பதை பார்த்த தனியார் நிறுவன ஊழியர்கள் மூடி வைத்திருந்த கதவை திறந்துள்ளனர். உடனே பெண்கள் அனைவரும் ஒரே சமயத்தில் உள்ளே செல்ல முண்டியடித்துள்ளனர். இதனால், முன் வரிசையில் நின்றிருந்த வயதான பெண்கள் தடுமாறி கீழே விழுந்தனர். இதனை அறியாத பின்னால் நின்ற மற்ற பெண்கள் முன்னோக்கி சென்றபோது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஒரே அலறல் சத்தமாக இருந்ததால் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. தகவலறிந்த வாணியம்பாடி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் வந்து, அங்கே கூடியிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கலைந்து செல்லும்படி செய்தனர். மேலும், நெரிசலில் சிக்கி மயங்கி கிடந்த பெண்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஈச்சம்பட்டு நாகம்மாள்(60), குரும்பட்டி வள்ளியம்மாள் (60), அரபாண்டகுப்பம் ராஜாத்தி(62), பழைய வாணியம்பாடி மல்லிகா (75) ஆகிய 4 மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து திருப்பத்தூர் கலெக்டர் அமர்குஷ்வாகா, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, எஸ்பி பாலகிருஷ்ணன், வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மற்றும் அதிகாரிகள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்கள் மற்றும் உயிரிழந்த மூதாட்டிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இதுகுறித்து எஸ்பி பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘இலவச புடவை வழங்குவதற்காக தனியார் நிறுவனத்திற்கு 5ம் தேதி (இன்று) தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு நாள் முன்னதாகவே டோக்கன் வழங்குவதை அறிந்து ஏராளமான பெண்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 மூதாட்டிகள் உயிரிழந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

இதுதொடர்பாக தனியார் நிறுவன உரிமையாளர் ஐயப்பனை (56) கைது செய்துள்ளோம் என்றார். நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஈமச்சடங்கு செலவிற்காக ரூ.25 ஆயிரம் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து வழங்கியுள்ளார்.

* உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் ைதப்பூசத்தையொட்டி அய்யப்பன் என்பவர் வழங்கிய இலவச வேட்டி, புடவை டோக்கன் வாங்க கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 4 பெண்கள் உயிரிழந்த துயர சம்பவம் அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த வயதான 4 பெண்களின் குடும்பத்தாருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வரும் 3 பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: