உளவு பார்க்க சீனா அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் பலூனைப் பார்த்து பதறும் அமெரிக்கா: சுட்டு வீழ்த்தினால் வெடித்து சிதறுமோ என அச்சம்

வாஷிங்டன்: பல நவீன ஆயுதங்கள், இடைமறித்து தாக்கும் தற்காப்பு உபகரணங்களுடன் உலகின் வலுவான ராணுவத்தை வைத்திருக்கும் அமெரிக்காவை, சீனாவின் ஹீலியம் பலூன் ஒன்று பதற வைத்துக் கொண்டிருக்கிறது. சீனா உளவு பார்க்க அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் இந்த ராட்சத உளவு பலூன் அமெரிக்க வான் பரப்பில் சுதந்திரமாக பறந்து கொண்டிருக்கிறது. பலூனை சுட்டு வீழ்த்தினால், வெடித்துச் சிதறுமோ என்ற அச்சத்தில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்வதறியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் அணுசக்தி ஏவுதளம் அமைந்துள்ள மொன்டானா பகுதியின் வான் பரப்பில் கடந்த செவ்வாய்கிழமை முதல் முறையாக ராட்சத பலூன் ஒன்று தென்பட்டது. வழக்கமான ஹீலியம் பலூன்களைக் காட்டிலும் இது பெரிய அளவில் இருந்ததால் உடனடியாக ராணுவம் விசாரணையில் களமிறங்கியது. அப்போது இது சீனாவில் இருந்து பறந்து வந்த பலூன் என்பது உறுதியானது.

பலூனுக்குள் சில பேலோடுகள், அதாவது கண்காணிப்பு கருவிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, உயர்பாதுகாப்பு கொண்ட அணுசக்தி ஏவுதளத்தை உளவு பார்க்கவே சீனா இந்த உளவு பலூனை அனுப்பியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் சந்தேகம் கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, சீனா இடையே பொருளாதார போர் முற்றியிருக்கும் நிலையில் இந்த விவகாரம் அமெரிக்காவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த பலூன் குறித்து உடனடியாக அதிபர் ஜோ பைடனுக்கு பென்டகன் தகவல் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. உளவு பார்க்க வந்த பலூன் என்றால் உடனே சுட்டுத் தள்ளுங்கள் என அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஆனால், பலூன் இருப்பது அணுசக்தி ஏவுதளத்தின் மீது என்பதால் எந்த ரிஸ்க்கையும் எடுக்க வேண்டாம் என பென்டகன் அறிவுறுத்தியது.

மேலும், இந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் அது வெடித்து சிதறும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பலூனின் உள்ளே 1000 பவுண்ட் எடை கொண்ட உளவு கருவிகள் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே பலூனை சுட்டால் அது குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பலூன் தரையில் இருந்து 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த படி மத்திய அமெரிக்காவை சுற்றி நகர்ந்து வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இந்த பலூனின் நகர்வை தொடர்ந்து கண்காணிப்பதாகவும், மேலும் ஓரிரு நாட்கள் இது அமெரிக்க வான் பரப்பிலேயே இருக்கக் கூடும் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.

 கடந்த வாரமே இந்த பலூன் அலாஸ்கா மாகாணத்தின் விமானப்படை தளத்தை கடந்து பறந்ததாக சில பெயர் வெளியிடாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, சீன உளவு பலூன் விவகாரம் அமெரிக்காவை கதி கலங்க வைத்துள்ளது. பலப்பல போர் விமானம், நவீன கருவிகள் என பலவற்றை வைத்திருந்தும் சீன பலூனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாமல் பென்டகன் கையை பிசைந்து கொண்டிருக்கிறது. பலூனை சுடவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த பலூன் விவகாரம் அமெரிக்க மக்களிடையே ஒருவித அச்சத்தையும் உண்டாக்கி உள்ளது.

Related Stories: