தமிழகத்தை 14 ஆண்டுகளாக ரயில்வே புறக்கணிப்பு: ராமதாஸ் சாடல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 6 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.1,158 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தான் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஆகும். இவற்றில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டம் தவிர மீதமுள்ள 5 திட்டங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சென்னை-மாமல்லபுரம்-கடலூர், அத்திப்பட்டு-புத்தூர், திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி ஆகிய 3 முக்கிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. சென்னை-மாமல்லபுரம்-கடலூர் பாதை கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப்பாதை அமைக்கவும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி பாதை சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக இருக்கும்.

அதனால் இந்தத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். கடந்த 14 ஆண்டுகளாக தமிழகத்திற்கு புதிய திட்டங்களும் வரவில்லை; ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதனால், தொடர்வண்டிப்பாதை கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியிருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 9 புதிய தொடர்வண்டிப் பாதை திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். அனைத்துத் திட்டங்களுக்கும் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயித்து, அதற்குள்ளாக செயல்படுத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Related Stories: