பாகிஸ்தான் மசூதியில் 101 பேர் பலியான விவகாரம்: தாக்குதல் நடத்தியவர் அடையாளம் தெரிந்தது

பெஷாவர்: பாகிஸ்தான் மசூதியில் 101 பேர் பலியான விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர் அடையாளம் தெரிந்தது. பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்கவா மாகாண தலைநகர் பெஷாவரில் பாதுகாப்பு மிகுந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மசூதியில் கடந்த 30ம் தேதி மதியம் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் மசூதியின் ஒரு பகுதி இடிந்தது.

உடனடியாக மீட்பு குழுவினர், போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டன. குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இத்தாக்குதலில், 97 போலீஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 101 பேர் பலியாகினர். ஏராளமானோர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாகிஸ்தான் வரலாற்றிலேயே மிக கொடூரமான இத்தாக்குதல் சம்பவத்துக்கு, பாகிஸ்தான் தலிபான் என்றழைக்கப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தங்கள் அமைப்பின் கமாண்டர் கொல்லப்பட்டதற்கு, பழிக்குப் பழி நடவடிக்கை என தெரிவித்துள்ளது.

விசாரணையில், தொழுகையின்போது, முதல் வரிசையில் இருந்த ஒருவர் தனது உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் குண்டு வெடிப்பு நடத்திய பயங்கரவாதியின் அடையாளத்தை மரபணு பரிசோதனை மூலம் போலீசார் கண்டறிந்தனர். இது, இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பு முனை எனவும், குற்றவாளியின் அடையாளத்தை கொண்டு தாக்குதலில் தொடர்புடைய ஒரு பெண்ணை கைது செய்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

Related Stories: