சதுரகிரி கோயிலுக்கு செல்ல தடையால் தாணிப்பாறை வனத்துறை கேட் வெறிச்

வத்திராயிருப்பு: கனமழை எச்சரிக்கையால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு செல்ல 2 நாட்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு தை மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு இன்று (பிப்.3) முதல் பிப். 6ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, நேற்று மற்றும் இன்று ஆகிய 2 நாட்களுக்கு சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

நேற்று தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சுந்தரமகாலிங்கம் சாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை பக்தர்களின்றி நடந்தது. இதேபோல, இன்றும் நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலுக்கு செல்ல நேற்று அனுமதி மறுக்கப்பட்டதால் ராமநாதபுரம், மதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தாணிப்பாறையில் வனத்துறை கேட் முன்பு சூடம் மற்றும் விளக்கேற்றி வழிபட்டு சென்றனர். ஒரு சில பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் இல்லாததால் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதி வெறிச்சோடியது.

Related Stories: