4 லட்சம் பேர் எழுதுகின்றனர் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடங்கியது: சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு-2 நேற்று தொடங்கியது. தமிழ்நாடு முழுவதும் 4 லட்சம் பேர் எழுதுகின்றனர்.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு-2 பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது. இந்த தேர்வு இரண்டு கட்டமாக, நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட தேர்வு நேற்று தொடங்கி 8ம் தேதி வரை நடக்கும். இரண்டாம் கட்டத் தேர்வு 10ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரைநடக்கும். தமிழ்நாட்டில் மொத்தம் 4 லட்சத்து 1856 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 188 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வில் 5313 மாற்றுத் திறன் கொண்டவர்கள் பங்கேற்க உள்ளனர். விழித்திறன் குறைபாடு உள்ளவர்கள் 2562 பேர். தேர்வு எழுதுவோருக்கு  கடந்த மாதம் 31ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. தேர்வு மையங்களை பொறுத்தவரையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 13, திருச்சி 13, சேலம் 14 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கணக்கு மற்றும் அறிவியல் பாடத்துக்கான தேர்வுகளை 2 லட்சத்து 21,240 பேரும், சமூக அறிவியல் பாடத்துக்கு 1 லட்சத்து 80,616 பேர் எழுதுகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு அங்கு கணினி வழியில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்துக்கும் ஒரு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்பார்வையாளராக  நியமிக்கப்பட்டுள்ளனர். 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 188 தேர்வு மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 417 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்வு நடப்பதை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: