எல்.ஐ.சி, எஸ்பிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் சார்பில் 6ம் தேதி ஆர்ப்பாட்ட பேரணி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: பொதுத்துறை வங்கிகளை அதானி குழுமத்தில் முதலீடு செய்ய வற்புறுத்தும் மோடி அரசை கண்டித்து எல்ஐசி, எஸ்பிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் 6ம் தேதி பேரணி நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: எல்.ஐ.சி மற்றும் எஸ்.பி.ஐ போன்ற அரசு நிறுவனங்களில் அதானி குழுமத்தின் ஆபத்தான பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகளுக்கு மோடி அரசு உதவியுள்ளது. இதனால், எல்.ஐ.சி.யின் 29 கோடி பாலிசிதாரர்கள் மற்றும் 45 கோடி எஸ்.பி.ஐ. கணக்கு வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட இந்திய முதலீட்டாளர்களை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது.

கடந்த சில நாட்களில் எல்.ஐ.சி.யின் 39 கோடி பாலிசிதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் 33 ஆயிரத்து 60 கோடி ரூபாய் வரை இழந்துள்ளனர்.  இதை எதிர்த்து அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள எல்.ஐ.சி மற்றும் எஸ்பிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்கிற கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை வரும் 6ம் தேதி நடத்த கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியினர் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டுப் போராட்டக் களத்தில் விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: