சவுகார்பேட்டையில் அதிகாலை பரபரப்பு சம்பவம் ஆந்திர நகை வியாபாரிகளிடம் ரூ.1.40 கோடி கொள்ளை: போலீஸ் எனக்கூறி காரில் வந்து கைவரிசை

சென்னை: சென்னையில் நேற்று அதிகாலையில் ஆட்டோவில் வந்த ஆந்திரா நகை வியாபாரிகளை காரில் வந்து வழிமறித்து போலீஸ் என கூறி ரூ.1.40 கோடி ரொக்க பணத்தை 4 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்றது. ஆந்திர மாநிலம் பாப்பட்டலா மாவட்டத்தை சேர்ந்த நகை வியாபாரிகள் ரகுமான் (48), சுப்பாராவ் (58). இவர்கள் சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகைப்பட்டறையில் தங்களது நகை கடைகளுக்கு நகைகள் வாங்க ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து ஆம்னி பேருந்து மூலம் நேற்று அதிகாலை சென்னை வால்டாக்ஸ் சாலையில் வந்து இறங்கினர். பிறகு இருவரும் ஆட்டோ மூலம் சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, இவர்கள் சென்ற ஆட்டோவை, கார் ஒன்று பின்தொடர்ந்து வந்துள்ளது. ஆட்டோ சவுகார்பேட்டை வீரப்பன் தெரு மற்றும் சிவசிங்கம் தெரு சந்திப்பு அருகே வரும் போது, பின்னால் வந்த கார் திடீரென ஆட்டோவை மோதுவது போல் வழிமறித்து நின்றது. காரில் இருந்து 4 பேர் கையில் லத்தி மற்றும் கை விலங்குகளுடன் வந்து ஆட்டோவில் அமர்ந்து இருந்த நகை வியாபாரிகளிடம், ‘நாங்கள் போலீசார், நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள். ஹவாலா பணம் எடுத்து வருவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. எனவே நீங்கள் கொண்டு வந்த பையை திறந்து காட்டுங்கள்’ என கூறியுள்ளனர்.

இதனால் போலீசார் தான் வந்துள்ளனர் என்று ரகுராம் மற்றும் சுப்பாராவ் ஆகியோர் நம்பி, தாங்கள் கொண்டு வந்த ரூ.1.40 கோடி பணம் இருந்த பையை திறந்து காட்டி உள்ளனர். அதில் கட்டுக்கட்டாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் இருந்தன. உடனே 4 பேரும், பணத்தை பையுடன் எடுத்துக்கொண்டு, நீங்கள் பணத்திற்கான ரசீதை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள யானைகவுனி காவல் நிலையத்திற்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு காரில் ஏறிச்சென்றுவிட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத நகை வியாபாரிகள், உடனே யானைகவுனி காவல்நிலையத்திற்கு சென்று, ‘சார் நாங்கள் நகை வியாபாரிகள், நகைகள் வாங்க கொண்டு வந்த ரூ.1.40 கோடி பணத்தை நீங்கள் எடுத்து வந்துவிட்டீர்கள். பணத்திற்கான அனைத்து ரசீதுகளும் உங்களிடம் கொடுக்கிறோம். எங்கள் பணத்தை கொடுத்துவிடுங்கள்’ என்று கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு காவல் நிலையத்தில் இருந்த போலீசார், ‘நாங்கள் யாரிடமும் பணத்தை பறிமுதல் செய்யவில்லை. உங்களை யாரே ஏமாற்றி பணத்தை பறித்து சென்றுள்ளனர்’ என்று கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நகை வியாபாரிகள் 2 பேரும், போலீசார் என கூறி தங்கள் பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களிடம் இருந்து பணத்தை மீட்டு கொடுக்கும்படி புகார் அளித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூக்கடை துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான், உதவி கமிஷனர் பாலகிருஷ்ண பிரபு, யானைகவுனி இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், சுரேஷ்குமார் ஆகியோர் கொள்ளை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.   

பின்னர் சம்பவம் குறித்து யானைகவுனி போலீசார் சவுகார்பேட்டை வீரப்பன் தெரு மற்றும் சிவசிங்கம் தெரு சந்திப்பில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல் உதவியுடன் ரூ.1.40 கோடி பணத்துடன் காரில் தப்பி சென்ற 4 மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், துணை கமிஷனர் உத்தரவுப்படி 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அதேநேரம், புகார் அளித்த நகை வியாபாரிகள் நாடகம் ஆடுகிறார்களான என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: