ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவோம் என சிறைக்கு சென்று வந்தவர்களிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பாஜ நிர்வாகி என கூறி மோசடிக்கு முயற்சி

சென்னை: போக்சோ வழக்கில் சிறைக்கு சென்றவர்களிடம், உங்கள் வழக்கின் ஆபாச வீடியோவை வாட்ஸ்அப்பில் பரப்பிவிடுவோம் எனக் கூறி ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர், ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் கடந்த 1ம் தேதி புகார் ஒன்று அளித்தார். அதில், எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போக்ேசா வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். எங்கள் வீட்டிற்கு கடந்த 1ம் தேதி மாலை வந்த நபர் தன்னை விஜயராகவன் என்றும், தாம் பாஜவில் மாவட்ட துணை செயலாளராக இருப்பதாகவும் கூறினார். பிறகு, உங்கள் மீது போக்சோ வழக்கு உள்ளது. எனவே எங்களுக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் போக்சோ வழக்கின் பழைய வீடியோவை நாங்கள் வாட்ஸ்அப்பில் பரப்பி, உங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் சிறைக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டிவிட்டு சென்றார்.

எனவே எனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். புகாரின்படி, ஐஸ்அவுஸ் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பணம் கேட்டு மிரட்டிய நபர் திருவல்லிக்கேணி குதிரத்தலி மக்கான் தெருவை சேர்ந்த பார்த்தசாரதி (35) என்றும், அவருடன் வந்தவர் ரமேஷ் (44) என்பதும் தெரியவந்தது. இருவரும் பணம் பறிக்கும் நோக்கில் பாஜ மாவட்ட துணை செயலாளர் என்று மிரட்டி பணம் பறிக்க முயன்றதும் விசாரணையில் உறுதியானது. இவர்கள் வீட்டிற்கு சென்று மிரட்டிய சிசிடிவி காட்சிகளும் இருந்தது. அதைதொடர்ந்து போலீசார் பாஜ நிர்வாகி என்று கூறி ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய பார்த்தசாரதி, ரமேஷ் ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: