பால் விலை உயர்வை கைவிட வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆவின் பால் பொருட்களின் விலை, எளிய மக்கள் பாதிப்படையும்படி தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது அரசு. கடந்த 10 மாதங்களில் மட்டும், மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, புதுவிதமான விலை உயர்வை கொண்டு வந்திருக்கிறது. ஆவின் பச்சைநிற பால் வகையில் கொழுப்புச் சத்து அளவை 4.5% லிருந்து, 3.5% ஆக குறைத்திருக்கிறது தமிழக அரசு. மேலும் முகவர்களுக்கான கொள்முதல் விலையை அதிகரித்ததன் மூலம், 2 ரூபாய் அளவில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆவின் பால் முகவர்கள் நலச் சங்கம் கவலை தெரிவித்திருக்கிறது.

ஆரஞ்சு நிற பால் வகையின் விலையை ஏற்றியதனால் பச்சை நிற பால் வகைக்கு மாறிய மக்களை வஞ்சிக்கும் வகையில் பச்சை நிற பால் வகையின் விற்பனையை முதலில் குறைத்தார்கள். தற்போது, பச்சை நிற பால் வகையில் கொழுப்பு சத்தை குறைத்து, ஆரஞ்சு நிற பால் வகையை மக்களின் மேல் கட்டாயப்படுத்தும் முயற்சியாகவே இது வெளிப்படுகிறது. இன்னுமொரு விலை உயர்வை தாங்கும் நிலையில் பொதுமக்கள் இல்லை. உடனடியாக, தற்போது கொண்டு வந்திருக்கும் மறைமுக விலை உயர்வை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: