உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும்: டெல்லியில் சி.வி.சண்முகம் பேட்டி

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஒ.பி.எஸ் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்கலாம் என அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லியில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அதிமுக பொதுக்குழு கூட்டப்படும். நல்ல நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

விரைவில் பொதுக்குழுவை கூட்டுவதற்கான அறிவிப்பை அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன் வெளியிடுவார். இருதரப்பும் கையெழுத்து போடுவது சாத்தியமில்லாதது. அதிமுகவில் பெரும்பாலான உறுப்பினர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபரே வேட்பாளராக இருப்பர். அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு என்பது இடைத்தேர்தலுக்கு மட்டுமான உத்தரவு என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பத்தில் இருவரும் கையெழுத்திடுவது நடக்காத காரியம் என வாதிட்டோம். அதிமுக வேட்பாளரை பொதுக்குழு முடிவெடுக்கட்டும் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். வேட்பாளே தேர்வு குறித்து பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை கடிதம் மூலம் பெற உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: