திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் வேடந்தாங்கல் அரசு பள்ளியில் மாணவர்களுடன் கலந்துரையாடல்: க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

மதுராந்தகம்: திமுக மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் உலக ஈரநில  நாளை முன்னிட்டு,  காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம், வேடந்தாங்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில்  மாணவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் விழிப்புணர்வு  நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர்  க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பரிசு மற்றும் சுற்றுச்சூழல் பயிற்சி கையேடுகள் வழங்கினார். இதில், மாநில சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சாய் ஜெயகாந்த பாரதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வெங்கடேசன், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் வேதாசலம் வரவேற்றார்.

சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ”வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளை பாதுகாக்கவேண்டும். ஏரியை பாதுகாக்கவேண்டும். தற்போது ஆற்று தண்ணீரும் மாசுப்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கவேண்டும்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து தமிழகத்தில் நல்ல மழை பெய்து, பாலாறு, செய்யாறுகளில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை செய்து வருகிறது. விவசாயிகளுக்கு நெல் விலையை ஏற்றி கொடுக்கப்பட்டுள்ளது” என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட கவுன்சிலர் மாலதி, ஒன்றியக்குழு துணைப் பெருந்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன், ஊராட்சி துணை தலைவர் கௌதமி, ஊராட்சி செயலாளர் வேணு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: