அரசுப் பள்ளி மாணவியர்களின் தற்காப்பு கலை பயிற்சிக்கு ரூ.1,838 லட்சம் ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாட்டில் 6744 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்க ரூ.1,838 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய கல்வி அமைச்சக திட்ட ஏற்பளிப்பு குழு ஒப்புதலின்படி 6,744 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு கணக்கிட்டு ரூ.1011 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 5519 உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கும் பயிற்சி அளிக்க ரூ.827.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் மாணவியருக்கு கராத்தே, ஜூடோ, டேக்வண்டோ, சிலம்பம் ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி 2022-23 கல்வி ஆண்டிலும், மாவட்ட உடற்கல்வி ஆய்வர்கள் உதவியோடு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாரம் இரண்டு  நாட்கள் மாலையில் ஒரு மணி நேரம் என்ற வீதத்தில் மூன்று மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்படும் குழுவினர், தற்காப்பு கலை வல்லுநர்களை  தேர்வு செய்து தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: