இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர்? அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இரண்டாம் நிலை காவலர் பணிக்கு இட ஒதுக்கீட்டில் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்து அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. முகம்மது ஆசிப் மற்றும் 10 பேர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்புதவற்கான அறிவிப்பு கடந்த 2019ல் வெளியானது. இதில் பி.சி (முஸ்லிம்) பிரிவினருக்காக 62 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு முடித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றோம். 62 இடங்களில் வெறும் 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.

இதுதொடர்பான வழக்கில், 52 இடங்களில் 43 பெண்களுக்கானது. அறிவிப்பு வெளியாகி 4 ஆண்டுகள் ஆனதால் காலாவதியாகிவிட்டது எனக்கூறி தள்ளுபடியானது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர், ‘‘2019ம் ஆண்டு அறிவிப்பின்படி, பி.சி (முஸ்லிம்) ஒதுக்கீட்டின்படி எத்தனை பேர் எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர்? இவர்களது மதிப்பெண் உள்ளிட்ட விபரம் என்ன? இவர்களில் எத்தனை பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறித்த விபரங்களை சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: