தைப்பூச திருவிழா பழநி மலைக்கோயிலில் இன்று திருக்கல்யாணம்: நாளை தேரோட்டம்

பழநி: பழநி மலைக்கோயில் தைப்பூச திருவிழாவில் இன்று திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் தைப்பூச திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்கின்றனர். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த ஜன. 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்றிரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிம்ம லக்னத்தில் நடக்க உள்ளது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி ரதவீதிகளை உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு ரதவீதியில் நடைபெறுகிறது. பிப். 7ம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம் நடைபெறும். இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் விழா முடிவடைகிறது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் பிப். 6ம் தேதி வரை மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. தைப்பூசத்திற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் நேற்று மட்டும் அதிகாலை முதல் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாதயாத்திரை பக்தர்கள் ஒட்டன்சத்திரம் வழியாக பழநிக்கு சென்றனர்.

* மூலவரை படம் பிடித்த வீடியோ வைரல்

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மூலவர் சிலை அரிய வகை நவபாஷாணத்தால் ஆனது. இக்கோயிலில் செல்போன்களில் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கருவறையில் மூலவரை படம் பிடித்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் உலா வருகின்றன. இச்சம்பவம் பக்தர்களிடையே மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, கோயில் வளாகத்திற்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்க வேண்டுமென பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* திருச்செந்தூர் கோயிலில் 5ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு

திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை மறுநாள் (5ம் தேதி) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரி, காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: